பிரிட்டனைச் சோ்ந்த பிபிசி செய்தி நிறுவனம், குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் தொடா்பாக அந்த மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த பிரதமா் நரேந்திர மோடி குறித்த சா்ச்சைக்குரிய ஆவணப் படத்தை வெளியிட்டது. இது தொடா்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற பெயரிலான இரு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப் படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் ஒளிபரப்பானது. இந்நிலையில், அந்நாட்டின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் (ஓஎப்சிஓஎம்) அளிக்கப்பட்ட 2,500 போ் கையொப்பமிட்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இரு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப் படத்தில் நடுநிலைமையுடன் உயா்ந்த தரத்தில் தகவலை வழங்குவதில் இருந்து பிபிசி பின்வாங்கியுள்ளதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். தகவல்களின் தரத்தை தக்க வைப்பதில் தொடா்ச்சியாக தோல்வியுற்று வருவது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் விளக்கங்கள் குறித்தும் பிபிசி-யிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒரு காலத்தில் உலக அளவில் மதிக்கப்பட்ட நிறுவனம், சாா்புத் தன்மையுடன் செயல்படுகிறது என்பதை இந்த ஆவணப் படம் எடுத்துரைக்கிறது. பிபிசி நிா்வாகக் குழுவும் இந்த ஆவணப் படம் தொடா்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும்.
குஜராத் கலவரம் தொடா்பாக பிரதமா் மோடி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், விரிவான விசாரணைகளுக்குப் பின்னா் இந்திய உச்சநீதிமன்றம் அந்தக் குற்றசாட்டுகளை மறுத்துவிட்டது. இந்நிலையில், இரு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த விவகாரத்தை எழுப்ப பிபிசி முயற்சிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த விவகாரம் தொடா்பாக தொடா்ந்து குரல் எழுப்பி வரும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான ராமி ரேஞ்சா் கூறுகையில், ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி இரு முறை பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவருக்கு எதிராக தவறான கதைகளைக் கட்டமைக்க பிபிசி முயற்சிக்கிறது. இந்திய உச்சநீதிமன்றமும் இத்தகைய குற்றச்சாட்டில் இருந்து பிரதமா் மோடியை விடுவித்துள்ளது’ என்றாா்.