இடைத்தேர்தல் என்பதே தேவையற்றது: தமிழருவி மணியன்

ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அந்த தொகுதியில் ஏற்கனவே மக்கள் வெற்றி பெறச்செய்த கட்சி அறிவிக்கும் வேட்பாளரைப் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தின் நல்லடையாளமாக அமையும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் யாரும் எதிர்பாராத நிலையில், இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, மனித உழைப்பை விரயமாக்கி, வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்து, தொகுதியில் அமைதியின்மையை உருவாக்கி ஓர் அவசியமற்ற இடைத்தேர்தலில் கட்சிகள் ஈடுபட வேண்டுமா? என்று அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஜனநாயகத்தின் நல் அடையாளம் மக்கள் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் 5 ஆண்டுகள் பதவியில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றுதான் வாக்களித்து தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரணம் அடைந்தால் மக்கள் வெற்றி பெறச்செய்த கட்சி அறிவிக்கும் வேட்பாளரைப் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தின் நல்லடையாளமாக அமையும்.

‘எதிர்பாராத நிலையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால், அவர் சார்ந்திருந்த கட்சி அறிவிக்கும் மனிதரையே எஞ்சிய காலத்துக்கு அந்த பதவியை அனுபவிக்க அனுமதிப்பதன் மூலம் தேவையற்ற இடைத்தேர்தலை தவிர்த்துவிடலாம்’ என்ற எம்.ஜி.ஆரின் பரிந்துரையை ஏற்பதன் மூலம் அ.தி.மு.க.பல்வேறு சங்கடங்களில் இருந்து விடுபடக்கூடும்.

நண்பர் இளங்கோவனுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒருவகை ஆறுதலாக அமையட்டும். இடைத்தேர்தல்களே இல்லாத நிலையை அனைத்து அரசியல் கட்சிகளும் உருவாக்கட்டும். எம்.ஜி.ஆரை கொடியில் வைத்திருக்கும் அ.தி.மு.க.விடம் இருந்து இந்த நல்ல தொடக்கம் உருவாகட்டும். பல நூறு கோடி ரூபாய் இந்த இடைத்தேர்தலில் பாழாவது தவிர்க்கப்படட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.