இந்தி மொழியை திணித்து பிற மொழிகளை அழிக்க நினைக்கிறது பாஜக: மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு – என்ற வரிசையில், ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை ஒன்றிய அரசு அழிக்கப் பார்க்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை திமுக மாநிலம் முழுவதும் நேற்று நடத்தியது. அதில், திருவள்ளூரில் நடந்த வீர வணக்கநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழினம் பகுத்தறிவுக் கருத்துகளால் இனமான – மொழி உணர்ச்சி பெற்று, வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவுகூரும் நாள்தான், இந்த வீரவணக்க நாள். தமிழ்நாடு இதுவரையில் பல்வேறு மொழிப்போர் களங்களைச் சந்தித்திருக்கிறது. பெரியார், மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், துறவி அருணகிரி அடிகள், அண்ணா, கலைஞர் எனத் தமிழ் உணர்வாளர்கள் பலரும் எழுதியும் பேசியும் இந்தித் திணிப்பின் ஆபத்துகளை மக்களிடையே விளக்கினர். இதையெல்லாம் உள்வாங்கி, இருப்பது ஓர் உயிர், அது போகப் போவது ஒருமுறை, அது நல்ல காரியத்துக்காக நாட்டுக்காகப் போகட்டுமே – என்று வாழ்ந்து, தமிழுக்காக உயிர் நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள்.

இந்தத் தியாகிகளைப் போற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25ம் நாளை மொழிப்போர்த் தியாகிகள் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம். மொழிக்காகத் தங்களது தேக்குமரத் தேகத்தைத் தீக்குத் தின்னக் கொடுத்த தீரர்கள்தான் திமுக தொண்டர்கள். இத்தகைய தியாகிகளை நமது முன்னோடிகளாக நாம் பெற்றிருக்கிற காரணத்தால் தான் இன்றுவரை மொழியைக் காப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இவர்கள் தான் தமிழ்த்தாயின் புதல்வர்கள், தமிழ்த்தாயின் பால் அருந்தி வளர்ந்த இந்தப் பிள்ளைகள் தான், தங்கள் உயிரைத் தந்து தமிழ்த்தாயைக் காத்தவர்கள். அதனால் தான் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அவர்களது தியாகத்துக்கு தலை வணங்குகிறோம்.

பள்ளி முதல் உயர்கல்விவரை தமிழில் படிக்கலாம் என்ற நிலை இங்கு இருக்கிறது. உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்திலும் திறன் பெறலாம் என்ற நிலை இருக்கிறது. இன்றைக்கு உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இந்த இருமொழிக் கொள்கைதான் காரணம். இதற்கு அடித்தளமான தியாகிகளை ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகும் நாம் போற்றுகிறோம், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அவர்களது தியாகத்தை நாம் மதிக்க வேண்டும். இன்றைக்கும் அந்த மொழியுணர்வை – இன உணர்வை – மான உணர்வை நாம் பெற்றாக வேண்டும்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசானது இந்திமொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி கல்வி மூலமாகத் திணிப்பதுவரை தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு – என்ற வரிசையில், ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது குடியரசுத் தலைவர்க்கு அனுப்பி வைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது. முழுக்க முழுக்க இந்திக்கு ஆதரவாக, இந்தியாவை இந்தி மயமாக ஆக்க நினைப்பதாக இருந்தது. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தவே அதன் பரிந்துரைகள் இருக்கிறது. இதனைக் கண்டித்து கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே இந்தித் திணிப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான நமது போராட்டம் எப்போதும் தொடரும். தமிழைக் காக்கும் நமது முயற்சிகள் எப்போதும் தொடரும். அதைச் சூளுரைக்கத்தான் தி.மு.க. மாணவரணியின் சார்பில் இந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றும் வீரவணக்க நாள் கூட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். திருவள்ளூர் கழகத்தின் தீரர்கள் நிறைந்த மாவட்டம். திராவிட இயக்கத்தை தோற்றுவித்த மூவரில் ஒருவரான நடேசனார் பொன்னேரிக்கு அருகில் இருக்கும் சின்னப்பூங்கனேரியைச் சார்ந்தவர்.

இன்றைக்கு இந்தி மொழித்திணிப்பை பாஜ. அரசு பட்டவர்த்தனமாகச் செய்கிறது. இந்திமொழி நாள் கொண்டாடும் ஒன்றிய அரசு மற்ற மாநில மொழிகளின் நாள் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக மட்டுமல்ல, அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்தியை ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக மட்டுமல்ல அதிகாரம் செலுத்தும் மொழியாக பாஜ அரசு உயர்த்திக் கொண்டு இருக்கிறது. மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும், இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக வேண்டும். இந்தி பேசாத மக்கள் மீது, இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது.

தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும் – இவைதான் நமது மொழிக் கொள்கை. இன்றைய மொழிப்போராட்டம் என்பது, இந்தியாவை ஆள இந்தி மொழிக்குத்தான் தகுதி இருக்கிறது என்ற பாஜகவின் மொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டம், அதனால் அதனை எதிர்த்து தொடர்ந்து போர் முழக்கம் செய்கிறோம். ஒருபக்கம் இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் நாம், இன்னொரு பக்கம், தமிழ் காப்புச் செயல்பாடுகளை அழுத்தமாகச் செய்து வருகிறோம்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டத் தயாராக இருக்கிறார்கள். அடுத்து நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக மக்கள் பாடம் கற்பிப்பார்கள். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் விரோதமான சக்திகள் யாராக இருந்தாலும் தேர்தல் களத்தில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

தமிழில் வணக்கம் சொல்வதன் மூலமாகவோ திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும் மேற்கோள் காட்டுவதன் மூலமாகவோ – தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது. இந்தியைப் புகுத்துவதன் மூலமாக தமிழை அழிக்கப் பார்ப்பதும் – தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்ற சர்ச்சையைக் கிளப்புவதன் மூலமாக தமிழ்நாட்டின் அடையாளத்தை அழிக்கப் பார்ப்பதும் – மாநில உரிமைகளைப் பறிப்பதன் மூலமாக சுயாட்சித் தன்மையை சிதைக்கப் பார்ப்பதும் – மிக மோசமான பண்பாட்டுப் படையெடுப்புகள். இதுவும் காலம் காலமாக நடக்கிறது. இதனை நாமும் காலம் காலமாக எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம். நமது பண்பாட்டைச் சிதைத்து இன்னொன்றைத் திணிக்கும் நோக்கம் கொண்டவர்கள் பின்வாங்கி இருக்கிறார்களே தவிர – நாம் எந்தக் காலத்திலும் பின் வாங்கியது இல்லை, அடிபணிந்தது இல்லை, அடங்கிக் கிடந்தது இல்லை, இதனை தமிழின விரோத சக்திகள் இனியாவது புரிந்து திருந்த வேண்டும். தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்களால் திருத்தப்படுவார்கள் என எச்சரிக்கிறேன்.

தந்தை பெரியாரும் – பேரறிஞர் அண்ணாவும் – முத்தமிழறிஞர் கலைஞரும் – மறையவில்லை நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்களை வாரிசு என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வேன். ஆமாம் நாங்கள் வாரிசுகள் தான், கோட்பாடுகளுக்கு வாரிசுகள், கொள்கைகளுக்கு வாரிசுகள், இலட்சியங்களுக்கு வாரிசுகள் – அதனை நிறைவேற்றும் கடமை எங்களுக்குத் தான் இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதன் மூலமாகக் காலத்தின் வாரிசுகளாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் சிந்தனையானது, இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவி வருகிறது. நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக, திமுக தலைமைப் பொறுப்புக்கு வந்த நான் – இன்று திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றது, எனது வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெருமையாக கருதுகிறேன். சர்.பிட்டி.தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார், பெரியார், அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் – ஆகியோரின் சிந்தனைகளையும் கனவுகளையும் நிறைவேற்றித் தரும் வாய்ப்பு என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.

ஊருக்கு உழைத்தல் யோகம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில், ஊருக்கு உழைத்தலே தியாகம். ஊருக்கு உழைத்தது மட்டுமல்ல – உயிரையே தந்திருக்கும் தியாகிகளின் நினைவுநாளில் அந்த தியாகிகளைப் போற்றும் அதேவேளையில்- அவர்கள் உருவாக்க நினைத்த தமிழ்நாட்டுக்கு எந்நாளும் உழைப்போம்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.