உலகில் 24 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழி வளர்ச்சிக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. உலகில் 24 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவுக்கு தேர்தல்களில் வெற்றி, தோல்வி வந்திருக்கலாம். ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் தோல்வியே வந்ததில்லை. எப்போதும் வெற்றிதான். அந்த வெற்றி, எப்போதும் தொடரும். அதுதான் நமது சிறப்பு. அடுத்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதில் திமுக கூட்டணிக்கு மக்கள் பெரும் வெற்றியை கொடுக்க போகிறார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஒருமுறை சட்டமன்றத்தில் நான் பேசும் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் என்று பேசினேன். இருவரும் அருகருகே அமர்ந்திருப்பார்கள். ஆனால் பேசிக் கொள்ள மாட்டார்கள். அப்போது சொன்னேன், இருவரும் தவறுதலாக எனது காரில் ஏற முற்பட்டீர்கள். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள். ஆனால் கமலாலயம் மட்டும் சென்றுவிட வேண்டாம் என்று கூறினேன். அப்போது எடப்பாடி பழனிசாமி வாயை திறக்கவே இல்லை. ஆனால் ஓபிஎஸ் எழுந்து, எங்களின் கார் எப்போதும் எம்ஜிஆர் நினைவை நோக்கியே செல்லும், அந்தப் பக்கம் போக மாட்டோம் என்று கூறினார். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் போட்டியிட போகிறார்கள், என்ன சின்னத்தில் போட்டியிட போகிறார்கள் என்பது கூட தெரியாது. ஆனால் இருவரும் போட்டிப்போட்டிக் கொண்டு கமலாலய வாசலில் இருக்கிறார்கள். இதனை அனைவரும் புரிந்துகொண்டு அடுத்த வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.