டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றிபெற்றது போல், தமிழ்நாட்டில் என்னாலும் முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியலில் அனலை கிளப்பியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. அதேபோல் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகளின் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும், நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறியதாவது:-
ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது. இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் ஆணையம் உள்ளதா என்பதை யாராவது கூற வேண்டும். திமுகவின் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த தேர்தலிலும் நான் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கப் போவது கிடையாது. எப்போதும் தனித்து தான் போட்டியிடுவேன். அதிகார பலம், பண பலத்தை ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் திமுக காட்ட தொடங்கிவிட்டது. அதேபோல் இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது, துணிச்சலான முடிவு எடுத்ததற்காக வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, தேர்தலில் வெற்றி பெறுவது அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியும், சீமானால் முடியாதா? 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எனது ஆட்டத்தை பாருங்கள் என்று தெரிவித்தார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்தது பற்றிய கேள்விக்கு, கமல்ஹாசன் கட்சி தொடங்கும் போது தனித்து தான் போட்டி என்று கூறினார். தற்போது அவர் காங்கிரஸ் பக்கம் சாய்வதாக தெரிகிறது. ஆனால் வரும் காலத்தில் நாங்கள் கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்தார்.
அதேபோல் அதிமுக பற்றிய கேள்விக்கு, அதிமுக இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நான் தேர்தல் ஆணையர் இல்லை. பணத்தை பாதுகாப்பதற்கு அதிமுகவிற்கு பாஜக தேவைப்படுகிறது. ஆனால் தேர்தலில் வாக்குகள் விழாது என்பதால் பாஜகவை கழட்டி விட அதிமுக நிற்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுக்கு யாரும் போட்டி கிடையாது. எத்தனை பேர் களமிறங்கினாலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி. நான் தனித்து போட்டியிடுவேன் என்று ஒவ்வொரு தேர்தலிலும் கூறி தனித்து போட்டிட்டு வருகிறேன். இது போன்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வரும் 29ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார். தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியமாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பேச்சுக்காக மட்டுமே என்று விமர்சித்தார்.