நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் தடை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது.
தமிழில், தாம்தூம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பேசும் தலைவி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து நடிகை கங்கனா ரனாவத் வன்முறை தூண்டும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒருசில கருத்துகளை பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு மே மாதம் நடிகை கங்கனாவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா குறித்து கங்கனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் அதிரடியாக நீக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதால், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார் கங்கனா.
நடிகை கங்கனா ரனாவத்திற்கு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத், ‘1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. காங்கிரஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சி’ என்று பேசியிருந்தார். அவருடைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன. பகத்சிங், காந்தி, நேதாஜி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்தியாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது கங்கனாவின் வழக்கமாக மாறிவிட்டது.
இந்நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகள் தடைக்கு பின் நடிகை கங்கனாவின் டுவிட்டர் பக்கம் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கங்கனாவின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கிய டுவிட்டர் நிறுவனம் அவரது கணக்கை மீண்டும் செயல்பட்டிற்கு கொண்டு வந்துள்ளது. தனது டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் நடிகை கங்கனா பதிவிட்ட முதல் டுவிட்டில், அனைவருக்கும் வணக்கம், இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியாக உள்ளது’ என்று பதிவிட்டார். அதைத் தொடர்ந்து திரைப்படத்துறையை கடுமையாக சாடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘திரைப்படத் துறை மிகவும் மோசமானது மற்றும் முரட்டுத்தனமானது. அவர்கள் எந்தவொரு முயற்சியின் / படைப்பின் / கலையின் வெற்றியை முன்னிறுத்த விரும்பும் போதெல்லாம், கலைக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பது போல உங்கள் முகத்தில் ஒளிரும் நாணய இலக்கங்களை வீசுகிறார்கள். அது அவர்களின் கீழ்த்தரமான தரத்தையும், அவர்கள் வாழும் விதமான தாழ்த்தப்பட்ட வாழ்க்கையையும் அம்பலப்படுத்துகிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.