ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான மாயாவதி தனது பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. உலக அளவில் சிறந்த தலைவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். அதேபோல மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து நேர்மையான அறிக்கையை குடியரசு தினத்தில் ஆண்டுதோறும் வெளியிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதோடு, குடியரசு தின நிகழ்வுகள் வெறும் நிகழ்ச்சிகளாக மட்டுமல்லாமல் மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றியதனை வெளிக்காட்டுவதற்கான நிகழ்வாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.