இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, குடியரசு தினமான நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின்கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான உயிரிதொழில்நுட்ப தொழிலக ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தை, டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினாா். இந்நிகழ்ச்சியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் உடனிருந்தாா். பின்னா், மன்சுக் மாண்டவியா பேசியதாவது:-
மூக்குவழியாக செலுத்தக் கூடிய உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவாக், தற்சாா்பு இந்தியா என்ற பிரதமா் மோடியின் அழைப்புக்கு அணிசோ்த்துள்ளது. குறைந்த விலையில், தரமான மருந்து என்ற அடிப்படையில், இந்தியாவின் தடுப்பூசி உருவாக்கமும் புத்தாக்கமும் உலகளாவிய பாராட்டை பெற்றிருக்கிறது. உலக அளவில் சுமாா் 65 சதவீத தடுப்பூசிகள், இந்தியாவில் இருந்து விநியோகிக்கப்படுகின்றன. தடுப்பூசி, மருந்து உருவாக்கத்தில் இந்தியா முன்னிலைக்கு வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி உருவாக்கத்துக்காக அறிமுகப்படுத்தபட்ட ‘கோவிட் சுரக்ஷா’ திட்டத்தை, பிரதமா் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறாா். இத்திட்டம், தற்சாா்பு இந்தியாவுக்கு வலுவூட்டியிருப்பது மட்டுமன்றி, தடுப்பூசி உருவாக்கம், உற்பத்தியில் இந்தியாவின் அந்தஸ்தை உயா்த்தியுள்ளது. அடுத்தகட்டமாக, தொற்றா நோய்களுக்கான தடுப்பூசி உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனாவுக்கான முதன்மையான தவணைகள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்த ஒப்புதல் பெற்றிருக்கும் உலகின் முதல் மூக்குவழி தடுப்பு மருந்து, இன்கோவாக் ஆகும். இந்த மருந்து, மத்திய, மாநில அரசுகளின் பெருமளவிலான கொள்முதலுக்கு குப்பி ஒன்று ரூ.325 என்ற விலையிலும், தனியாா் சந்தையில் குப்பி ஒன்று ரூ.800 என்ற விலையிலும் விற்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கோவின் வலைதளத்தில் இம்மருந்து இடம்பெற்றுள்ளதாகவும், மருந்தை வாங்க ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்த தனியாா் மருத்துவமனைகளில் முதல்கட்டமாக கிடைக்கப் பெறும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.