மதிப்பெண் குறித்த குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை கையாளுவது எப்படி?: மோடியுடன் மாணவி கேள்வி!

மதிப்பெண் குறித்த குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை கையாளுவது எப்படி என்று பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் மதுரை மாணவி கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து ‘பரிக்ஷா இ சர்ச்சா’ என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். மாணவர்களுக்கு தேர்வு மீதான அச்சத்தை போக்கும் வகையிலும் மன அழுத்தில் இருந்து மாணவர்கள் விடுபட்டு தேர்வு எழுதுவது தொடர்பாக பிரதமர் மோடி அறிவுரைகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர். இதில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவிகள் ஆவர். இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளித்தார்.

தேர்வுகள் குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமரிடம் முதல் கேள்வி கேட்கும் வாய்ப்பு, தமிழக மாணவிக்குதான் கிடைத்தது. மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பிளஸ்-2 மாணவி அஸ்வினிதான் முதல் கேள்வியை கேட்டார். அவர் பிரதமர் மோடியிடம், “எங்களுடைய பெற்றோர் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு எங்களுக்கு சில நேரங்களில் மன உளைச்சலை தந்து விடுகிறது. நாங்கள் நன்றாக படித்தாலும், சில தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. நல்ல மதிப்பெண் எடுக்கும் எங்கள் மீது பலரும், அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று நம்பிக்கை வைத்து விடுகிறார்கள். அதனை நிறைவேற்ற முடியாமல் போகும் போது எங்களுக்கே மன பாதிப்பு ஏற்படுகிறது. அதனை எதிர்கொள்வது எப்படி?” என்றார்.

இந்த கேள்விக்கு பிரதமர் மோடி, மிகவும் அருமையான தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்தார். “கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள், பவுண்டரி, சிக்சர் என்று தங்களது விருப்பத்தை கூறிக் கொண்டே இருப்பார்கள். பலரும் அவர்களது ஆசையை பேட்ஸ்மேனிடம் கூறினாலும், பேட்ஸ்மேன் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற பந்தின் மீது மட்டுமே குறியாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுடைய எதிர்பார்ப்பை பற்றி கவலைப்படக்கூடாது. இருப்பினும் மற்றவர்கள் எதிர்பார்ப்பு தனக்கு ஒரு உந்துதல் ஆகவும், தூண்டுதலாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் தனது கவனம் முழுவதும் தன்னுடைய படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்” என்று, பிரதமர் மோடி பதில் கூறினார்.

மாணவி அஸ்வினி, மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர். அவருடைய தந்தை சின்னச்சாமி, அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். தாயார் விஜயலட்சுமி. இல்லத்தரசி. இந்த நிகழ்ச்சிக்குப்பின் பிரதமர் மோடி, மதுரை மாணவியின் கேள்வி குறித்து தனது டுவிட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், கிரிக்கெட் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், முதல் கேள்வியே (மதுரை மாணவி) ‘கூக்ளி’ பந்து வீச்சாக இருந்தது என்று பெருமையாக கூறியிருந்தார். அதாவது கிரிக்கெட்டில் கூக்ளி பந்து என்பது, எவ்வளவு பெரிய பேஸ்ட்மேனாக இருந்தாலும் அவரை சற்று தடுமாற வைத்து விடும். அதே போல மதுரை மாணவியின் முதல் கேள்வி, தனக்கு சற்று தடுமாற்றத்தை கொடுத்து விட்டது என்ற தொனியில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த உரையாடலின் போது மாணவர் ஒருவர் பிரதமர் மோடியிடம் ஸ்மார்ட் ஒர்க் அல்லது ஹார்ட் ஓர்க் எது முக்கியம் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, சிலர் புத்திசாலித்தனமாகக் கடுமையாக பணியாற்றுவார்கள்.. சிலர் கடுமையாகப் புத்திசாலித்தனமாக பணியாற்றுவார்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி “இதில் நாம் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நாம் விரும்பும் முடிவை பெற அந்த சூழலுக்கு என்ன தேவையே அதைப் பொறுத்தே வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அதேபோல், மாணவர்கள் கேட்ஜெட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பிரதமர் மோடி இது தொடர்பாக கூறுகையில், இப்போது எல்லாம் மாணவர்கள் 6-7 மணி நேரம் செல்போன்களில் நேரத்தை கழிக்கின்றனர். நமது இளைய தலைமுறையினரை இது பாழ்படுத்துகிறது. கேட்ஜட்களின் அடிமையாக நாம் மாறிவருகிறோம். விரதம் ( fasting) கடைபிடிக்கும் கலாசாரம் நம்மிடம் உள்ளது. ஒரு நாள் அல்லது ஒருவாரத்திற்கு டிஜிட்டல் விரதம் இருக்கலாம் என்று நாம் முடிவு எடுக்கலாமா? முயற்சி செய்து பாருங்கள். அது உங்களுக்கு பிடித்து போகும். டிஜிட்டல் பாஸ்டிங்கின் காலத்தை அதிகரிக்க நீங்கள் விரும்புவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஒரே அறையில் அமர்ந்து கொண்டு ஒருவொருக்கொருவர் மெசேஜ் டெக்ஸ்ட் செய்வதை நாம் பார்க்கிறோம். இது ஒரு நோய் போன்றது. அதை உணர்ந்து இத்தகைய போக்கை நீக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும்” என்றார்.