ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஜெய்ஷ்-இ-முகமது தற்கொலைப் படையினரால் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து தகர்க்கப்பட்ட இடத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் காந்தி உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற அணிவகுப்பு, கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பை வழங்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கக் கூடிய பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான பாதுகாப்புக் குறைபாடு குறித்து நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவரங்களுக்கு பொறுப்பான பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், யாத்திரை இன்றைக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் காவல் துறையை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும் அவர்கள் யாத்திரை முடியும் வரை முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதாக அவர்கள் கூறியதை வரவேற்கிறோம்.
இருப்பினும், ஒவ்வொரு நாளும் பாரத் ஜோடோ யாத்திரையில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு நடந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சாதாரண மக்கள் யாத்திரையில் கலந்து கொள்வது ஒரு தன்னியல்பான செயல் என்பதால், ஒரு நாளில் எத்தனை பேர் வருவார்கள் என்பதை ஏற்பாட்டாளர்கள் சரியாகச் சொல்வது கடினம். அடுத்த இரண்டு நாட்களில் யாத்திரையிலும், ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விஷயத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் யாத்திரை மற்றும் விழாவின் உச்சம் வரை போதுமான பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.