மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து நாட்டை பிளவுபடுத்த சதி: பிரதமர் மோடி!

பிபிசி ஆவணப்படம் விவகாரம் மூலம் நாட்டை பிளவுபடுத்த சதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த ஆண்டு, என்சிசி அதன் 75வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வின் போது, ​​என்சிசி-யின் வெற்றிகரமான 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், சிறப்பு தின உறை மற்றும் 75 ரூபாய் மதிப்பிலான பிரத்யேக நாணயத்தை பிரதமர் வெளியிட்டார். கன்னியாகுமரி முதல் டெல்லி வரையில் எடுத்துவரப்பட்ட ஒற்றுமைச் சுடர் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டு கரியப்பா மைதானத்தில் ஏற்றப்பட்டது. இந்த அணிவகுப்புப் பேரணியானது இரவு மற்றும் பகல் என இருவேளைகளைக் கொண்ட கலப்பு நிகழ்வாக நடத்தப்பட்டதுடன், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் கருப்பொருளில் கலாச்சார நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றது. வசுதைவ குடும்பகம் எனப்படும் உலகம் ஒரே குடும்பம் என்ற உண்மையான இந்திய உணர்வுடன், 19 வெளிநாடுகளைச் சேர்ந்த 196 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

அணிவகுப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டின் அதிக இளைஞர்கள் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நோக்குகிறது. இளைஞர்களுக்காக டிஜிட்டல், ஸ்டார்ட் அப் மற்றும் புதுமைப் புரட்சிகளை தனது அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. நாட்டை உடைக்க பல சாக்குப்போக்குகள் எழுப்பப்படுகின்றன. பாரத அன்னையின் குழந்தைகளிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்காக பல பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. இதுபோன்ற முயற்சிகள் இருந்தபோதிலும், இந்திய மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்காது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே இந்தியா மகத்துவத்தை அடைய முடியும்.

பாதுகாப்புத் துறையில் முன்பு இறக்குமதி செய்யப்பட்ட தாக்குதல் துப்பாக்கிகள், இப்போது நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதை காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் கண்டுள்ளன. மூன்று ஆயுதமேந்திய எல்லைகளிலும் பெண்களை நிலைநிறுத்துவதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் பெண் கேடட்களின் முதல் தொகுதி பயிற்சி தொடங்கியது. மேலும் 1500 பெண் மாணவர்கள் சைனிக் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், என்சிசி இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், விமானப்படைத் தளபதி விஆர் சவுதாரி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கிர்தர் அர்மானே ஆகியோர் கலந்து கொண்டனர்.