ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் குடியரசு தின விழாவுக்குப் பின் பாசறைக்குத் திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது.
நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த ஜன. 26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். இந்தாண்டு எகிப்து அதிபர் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். அதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். குடியரசு தின விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழாவுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் தலைநகர் டெல்லிக்கு வந்தனர். குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக முடிந்துள்ள நிலையில், முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி கடமை பாதையில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 29 இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
எப்போதும் போருக்குச் சென்ற படைகள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பும் நிகழ்ச்சியே தான் பாசறை திரும்பும் என்று பொதுவாக அழைப்பார்கள். முப்படைகளின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியே பாசறை திரும்பும் நிகழ்ச்சியாகும். தற்போது குடியரசு தின விழாவுக்காக வீரர்கள் தங்கள் இடத்தில் இருந்து டெல்லி வந்துள்ள நிலையில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அவர்கள் முப்படைகளும் மீண்டும் பாசறை திரும்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடக்கும்.
சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. காரைக்குடியில் பெரியார் சிலையை அகற்றிய 2 அதிகாரிகள்
20க்கும் மேற்பட்ட இசை அணிவகுப்புடன் மிகச் சிறப்பாக இந்தாண்டு பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைக் காண ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் அங்குத் திரள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாகக் குறைந்த அளவிலேயே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தாண்டு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆயிரம் பேர் இதைக் காண டெல்லி திரண்டுள்ளனர்.
எப்போதும் முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் குதிரைப் படை குடியரசுத் தலைவரை வரவேற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். கொட்டும் மழைக்கு நடுவிலும் இந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது.
குடியரசு தின விழா அதிகாரப்பூர்வமாக நிறைவடைவதையே இது குறிக்கிறது. இந்திய ராகங்களை அடிப்படையாகக் கொண்ட 12 பாடல்களை இசைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அங்கு மக்கள் ஆர்வமாகக் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், இதில் அனைவரையும் கவரும் வகையில் சுமார் 3500க்கும் மேற்பட்ட டிரோன்கள் கலந்து கொள்ளும் அட்டகாசமான ஒரு டிரோன் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இவை அத்தனையும் இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட டிரோன்கள் ஆகும்.