காவல்துறையை விமர்சித்து முழக்கம் எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது, காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகாரில், ஆரணி காவல் நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பாஸ்கரனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெறும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், ஜனவரி 28ஆம் தேதியான நேற்று விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாஸ்கரனின் ஆதரவாளர்கள் ஆரணி நகருக்கு வருகை தந்து, காவல் நிலையம் முன்பு கோஷமிட்டு பாஸ்கரனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் காவல்துறை பற்றி தரக்குறைவாகப் பேசி, முழக்கங்கள் எழுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், கோஷங்களை எழுப்புவது காக்கிச் சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும். ஓரிரு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டுமொத்த காவல்துறையினரை அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களை காக்க உழைக்கும் காவல்துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.