காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூர் மாநகர திட்டத்திற்கு காவிரியில் இருந்து நீரை எடுக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது இரு மாநிலங்களுக்கு இடையேயும் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களுரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், மின்உற்பத்திக்காகவும் இந்த அணையை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து கர்நாடக அரசு மத்திய ஜல்சக்தி துறை, மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. எனினும், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும் என கருதி தமிழ்நாடு இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி எதையும் கொடுக்கவில்லை. இருந்த போதிலும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி மத்திய அரசுக்கு தொடர்ந்து கர்நாடக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இது ஒருபக்கம் இருக்க பெங்களூர் மாநகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கர்நாடக அரசு நீர் எடுப்பதாகவும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காகவும் காவிரி நீரை எடுப்பதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது. காவிரி நீரை கர்நாடக அரசு எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள்.. குடிநீர் தேவைக்காக எவ்வளவு நீரை பயன்படுத்துகிறார்கள். வேறு ஏதேனும் தேவைக்காக பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை இந்த மனுவில் வைக்கப்பட்டுள்ளது. பெங்களுர் குடிநீர் திட்டத்திற்கு எடுக்கப்படும் நீரை காவிரி மேலாண்மை ஆணையம் கண்காணிக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.