ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னை எளிதாக அணுக முடியும்: அதிமுக வேட்பாளர் தென்னரசு!

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னை எளிதாக அணுக முடியும் என்றும், இந்தத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி தரப்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவ பிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு கால தாமதமாகி வந்தது. இதற்கு பாஜகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படாததும், உச்சநீதிமன்ற வழக்கும் காரணமாக பார்க்கப்பட்டது. இதனிடையே பாஜகவின் நிலைப்பாடு எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு, பாஜக நிலைப்பாட்டுக்காக அதிமுக காத்திருக்கட்டும் என்று நாராயணன் திருப்பதி கூறி இருந்தார். ஆனால் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு காத்திருக்காமல் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பணி மனை திறந்து வைக்கப்பட்ட கூட்டத்தில், தென்னரசு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தேர்வு செய்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரிவாக்கம், அரசு மருத்துவமனை மேம்பாலம், கனி ஜவுளிச் சந்தைக்கு புதிய வணிக வளாகம் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

என்னை எளிதில் யாரும் அணுக முடியும். எனது வீட்டில் காவலுக்காக வாட்ச்மேனோ, நாயோ இல்லை. 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ள முடியும். இந்தத் தொகுதி மக்களில் பெரும்பாலானவர்கள் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, உரிமையாய் பழகி வருகிறேன். இந்தத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.