மத்திய அரசு முடக்கிய பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை தமிழில் இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட உள்ளார்.
2002-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பிரதமர் மோடி பதவி வகித்தார். அப்போது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் சாதுக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் மத மோதல்கள் வெடித்தன. இதில் சுமார் 1,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகை உலுக்கிய மிக மோசமான மதப்படுகொலைகளில் ஒன்றாக குஜராத் இனப்படுகொலைகள் கருதப்படுகிறது. இது தொடர்பாக குஜராத் முதல்வராக இருந்த மோடி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்குகளில் இருந்து மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குஜராத் கலவரங்கள், பிரதமர் மோடியை மையப்படுத்தி பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே பிபிசி ஆவணப்படத்தை பாஜகவுக்கு எதிரான கட்சிகள் நாடு முழுவதும் திரையிட்டு வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது. தற்போது பிபிசி ஆவணப்படத்தை திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழில் மொழிபெயர்த்துள்ளது. தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பிபிசி ஆவணப்படம் இன்று மாலை சென்னையில் வெளியிடப்படுகிறது.
சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் “இந்தியா: மோடி என்கிற கேள்வி” என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர் வெற்றி மாறன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.