ஈரோடு கிழக்கு தொகுதி: ஓபிஎஸ் அணி வேட்பாளர் வாபஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக அந்த அணியின் மூத்த தலைவர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் அறிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக, நாம் தமிழர், அமமுக ஆகியவையும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மநீம, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அதிமுக-பாஜக கூட்டணியில் தொடக்கம் முதலே குழப்பம் இருந்து வந்தது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளுமே பாஜகவின் ஆதரவை கேட்டிருந்தன. பின்னர் அதிமுகவின் இபிஎஸ் அணி, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தது. இதற்குப் போட்டியாக அதிமுக ஓபிஎஸ் அணி, செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இரு அணிகளும் வேட்பாளரை அறிவித்ததால் பாஜகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளும் பாஜக பக்கமும், அதிமுக இபிஎஸ் பக்கமுமாக சிதறின. அதிமுக இபிஎஸ் அணியும், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற புதிய கூட்டணியை அறிவித்தது. ஆனால் சில மணிநேரங்களிலேயே மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது. இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையிலான கூட்டணி எனவும் பேசியது.

இந்நிலையில் புதிய திருப்பமாக, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்தது. ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த இடையீட்டு மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணையும் உத்தரவும் ஒட்டுமொத்த களநிலவரத்தையே மாற்றிப் போட்டது. எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருங்கிணைந்த ஒரு வேட்பாளரை அதிமுக அவைத் தலைவர் பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அனைத்து தரப்பும் ஏற்றுக் கொண்டது. அத்துடன் அதிமுகவின் ஓபிஎஸ் அணி வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்றது பாஜக.

அதேநேரத்தில் அதிமுகவின் இபிஎஸ் அணி, ஏற்கனவே அறிவித்த தென்னரசுவை வேட்பாளர் என குறிப்பிட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தைப் பெற்றது. தென்னரசுவை ஆதரிக்கவில்லை எனில் யார் வேட்பாளர் என்ற கேள்வியையும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கேட்டது அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தரப்பு. இதற்கும் நேற்று வரை ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருந்த போதும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்துடன் தமிழ் மகன் உசேன், டெல்லி சென்றார்.

இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் அணியின் அணியின் மூத்த தலைவர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுகிறோம் என அதிரடியாக அறிவித்தனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து அதிமுகவின் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.