டெல்லியில் மூன்றாவது முறையாக மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைப்பு!

எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், டெல்லியில் மூன்றாவது முறையாக இன்று மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்தாண்டு நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜன. 6ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அப்போது மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்கள் நியமனம், தேர்தல் நடத்தும் அவைத்தலைவர் நியமனம் ஆகியவற்றில், முதல்வர் கவர்னர் இடையே மோதல் போக்கு இருந்தது.
இதையடுத்து டெல்லி மாநகராட்சி அலுவலகத்தில், பாஜ.க,- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜன. 24-ல் மேயர் மற்றும் துணைமேயர் தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது கடந்த முறை போல, பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. இதனால் மேயர், துணை மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து ஆம்ஆத்மி கட்சியினர் பாஜ.,வினர் தான், மேயர் தேர்தல் ஒத்திவைப்பிற்கு காரணம் என கூறி வந்தனர். இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் மேயர் தேர்தல் குறித்து ஆலோசனை நடந்தது. இதையடுத்து இன்று(பிப்.,06) மீண்டும் மேயர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் ஆம்ஆத்மி- பாஜ., வினர் இடையே மோதல் வெடித்தது. மூன்றாவது முறையாக இன்று மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.