சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும் என்று பா.ஜ.கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அசல் எல்லைக் கோட்டு பகுதியில் 1996 ஆம் ஆண்டில் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ள நிலையிலும், 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் இருந்து சீனா படைகளை விலகிக்கொள்ளும் வரையில், சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்.
சீனாவை எதிர்கொள்வதற்கான, இதுவரை வெளியிடப்படாத ரகசிய தகவல்கள், நிர்ப்பந்தங்கள் ஏதேனும் பிரதமர் நரேந்திர மோடி வைத்திருக்கிறார் என்றால், அதை அவர் தானாக முன்வந்து அவற்றை வெளியிட வேண்டும். அப்படி செய்யும்போது, 2024 இல் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்புத் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறவனத்தின் பதிலை தனது டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்திருந்த சுப்ரமணியன் சுவாமி, அதானி குழுமத்துக்கு எதிராக கயிறு இறுகுகிறதா? இதனை மோடியால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்று தனது கருத்தினை சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.