அதானி குழும முறைகேடுகள்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாளை வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற வேண்டும். இந்த நிலையில், அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக அலுவல்கள் நடைபெறாமல் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடியது. எல்ஐசி நிறுவனம் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தது மற்றும் அரசு வங்கிகள் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ள கடன்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.

இதைத் தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 2 மணிக்கு மேல் கூடியது. அப்போது அதானி குழும முறைகேடு விவகாரம் – நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. எதிர்க்கட்சியின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்திற்கு பிறகே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை காட்டிலும் பிரதமர் முதலில் பதில் அளிக்க வேண்டும். அதானி குழும நிறுவனத்தின் புகார் பற்றி மத்திய அரசு விவாதிக்க மறுப்பதோடு அதை அவை பதிவுக்கு கொண்டு வரக் கூடாது என நினைக்கிறது. ஜனாதிபதி உரை மீதான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம். அதற்கான முக்கியத்துவத்தையும் தருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.