ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன் களமிறங்க உள்ளார். இந்தத் தேர்தலில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் வேட்பாளர்களை களம் இறக்கினர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஆதரவு கடிதம் பெற்றார். அந்த கடிதங்களை இன்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளது. மேலும் அதிமுகவின் வேட்பாளருக்கான A மற்றும் B வடிவங்களில் தமிழ் மகன் உசைன் கையெழுத்திட இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.