விக்டோரியா கெளரி சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்ற நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விக்டோரியா கௌரி நியமனத்தை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விக்டோரியா கௌரி, நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வருடத்துக்கு அவரது செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்றுக் கொண்டார்.
விசாரணையின்போது, தானே மாணவனாக இருந்த போது அரசியல் கட்சித் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்று நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதிகளாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது. நீதிபதிகளை அவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளின் அடிப்படையில் பின்தொடர முடியாது. அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்த பின்னரே, நீதிபதியாக கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, 10.35 மணியளவில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவியேற்றுக்கொள்ளவிருந்த நிலையில், 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மூத்த வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் நேற்று திங்கள்கிழமை முறையிட்டாா். இதையடுத்து, இன்று காலை 9.15 மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதையடுத்து, இந்த மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
விக்டோரியா கெளரி உள்பட 11 வழக்குரைஞா்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு திங்கள்கிழமை வெளியானது. சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் விக்டோரியா கெளரிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ‘இவருடைய பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற வேண்டும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்திடமும், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கும் அவா்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்தவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாசார படுகொலை செய்வதாகவும் வழக்குரைஞா் விக்டோரியா கெளரி பேசிய காணொலி சமூக வலைதளங்களில் உள்ளது’ என்று தங்களது மனுவில் மூத்த வழக்குரைஞா்கள் குறிப்பிட்டிருந்தனா்.
11 வழக்குரைஞா்கள் மற்றும் 2 மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில், மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு வழக்குரைஞராக உள்ள விக்டோரியா கெளரியை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா்கள் 21 போ் கையொப்பமிட்டு குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கும் கடிதம் அனுப்பினா். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விக்டோரியா கெளரி நியமனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விழாவில் விக்டோரியா கெளரிக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், 12 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.