மக்களவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி ஆளுநரின் அத்துமீறல்கள், அதானியை பாதுகாக்கும் மத்திய அரசு உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனம் செய்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கனிமொழி கடுமையாக விமர்சித்தார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கனிமொழி எம்பி பேசியதாவது:-
மத்திய பாஜக அரசு ஒற்றைத் தன்மையை உருவாக்க விரும்புகிறது. ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக அரசு நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. மாநிலங்களின் சாதனைகளை, உழைப்பை, ஆற்றலை, அதிகாரத்தை சிறுமைப்படுத்தும் பாஜக அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் தோல்வி அடைந்துள்ளது. ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு தொடங்கி ஒரே கட்சி என்ற திட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க நினைக்கிறது. அந்த திட்டம் ஒருபோதும் பலிக்காது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா என பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் எதுவும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்ட மத்திய அரசு மறந்துவிட்டது.
ஒவ்வொரு மாநில மக்களையும் நீங்கள் குறைத்து மதிப்பிட்டு வருகிறீர்கள். மாநில நலன்கள், இலவசங்கள் என்றால் என்னவென்று உங்களுக்கு புரியவில்லை. ஆனால் நாங்கள் முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூக நீதி, ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றின் மாடலாக இருக்கிறோம். 1967ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பியும், பேராசிரியருமான அன்பழகன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது எனக் குறிப்பிட்டார். அதை இங்கே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு ஆளுநர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இன்னும் நிலுவையில் வைத்திருப்பது குற்றம். இதேபோல் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். கூட்டாட்சி தத்துவம் என்னவென்பதை அம்பேத்கர் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதை நீங்கள் ஒருமுறை படித்து பாருங்கள்.
ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நமது நாட்டில் சுமார் 4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. மத்திய பாஜக அரசு சர்வாதிகார திட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது. நாடாளுமன்றத்தை மதிக்காமல் ஆலோசனை நடத்தாமல் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறது. நீங்கள் எதிர்க்கட்சிகள், மக்கள், பத்திரிகைகள் பேசுவதை செவி கொடுத்து கேட்க மறுக்கிறீர்கள். மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்கள் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அவற்றை ஆராய்ந்து படித்து பார்க்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நீங்களாகவே மசோதாக்களை நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதானி கார்ப்பரேட் மோசடி குறித்து செய்திகள் வெளியானதும் நீங்கள் எவ்வளவு வேகமாக எதிர்வினை ஆற்றுகிறீர்கள், பாதுகாக்கிறீர்கள், உடன் நிற்கிறீர்கள் என்பதை பார்க்க முடிகிறது. இதை பற்றி பேசினால் தேசத்திற்கு எதிரானது என எங்களை முடக்க பார்க்கிறீர்கள்.
சமஸ்கிருதத்திற்கு ரூ.198.98 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு. ஆனால் தமிழுக்கு ரூ.11.86 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.4 ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ்-க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 20-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதேநேரத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறுதலை பெருமிதமாக பாஜக எம்பி பேசுகிற அவலம் இருக்கிறது. இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.