தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 4வது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் சுமார் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒரு கோடியே 48 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை. 2-வது தடவை தடுப்பூசி போட்டு 9 மாதம் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்கள் என சுமார் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது. இவர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த வசதியாக நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது.
இந்த முகாம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறியதாவது:-
2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுகிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் பெயர், விபரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதை வைத்து வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான் இன்று இரவு சேலம் செல்கிறேன். நாளை காலை முதல் மாலை வரை ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட முகாம்களை நேரில் பார்வையிடுகிறேன். இரவு 7 மணிக்கு சென்னை திரும்புகிறேன். அப்போது மொத்தம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விபரம் அறிவிக்கப்படும். இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிக அளவில் வந்து ஊசி போட்டுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.