தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல்: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல் செய்வதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதுரை மருத்துவக் கல்லுாரி முதலாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் ஏற்றுக்கொண்ட ‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழி தி.மு.க., அரசால் சர்ச்சை ஆக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில், நடந்த தி.மு.க., மாணவர் பிரிவு மாநாட்டில், கல்வி நிறுவனங்களில் தி.மு.க., மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே முக்கிய தீர்மானம். அதன் நீட்சியாகவே மதுரை மருத்துவக் கல்லுாரியில், ‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழிக்கு எதிராக விஷ வித்தை விதைக்கும் செயல் அமலாக்கப்பட்டு இருக்கிறது என்று தோன்றுகிறது.

‘ஒரு நோயாளிக்கு நல்லது செய்வேனொழிய இம்மியளவும் தீங்கு செய்ய மாட்டோம்’ போன்ற வாக்குறுதிகளை உள்ளடக்கியதே ‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழி. இந்தியாவில் இருக்கக்கூடிய சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த உறுதிமொழி மறுசீரமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், உறுதிமொழியில் இல்லாததை தி.மு.க., அரசு திரித்துப் பேசுவதும், கல்விக்கூடத்தில் அரசியலைப் புகுத்துவதும் அத்துமீறல்.எல்லாவற்றையும் அரசியல்படுத்திப் பழக்கப்பட்ட தி.மு.க., அரசு, தேவையில்லாமல் மருத்துவ படிப்பிலும் தனது மூக்கை நுழைக்கிறது. எனவே, மத்திய அரசும், இந்திய மருத்துவ கழகமும் இந்த விஷயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.