ராகுல் காந்தி மற்றும் கார்கே கூறிய கருத்துக்கள் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இதற்காக மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரம் மற்றும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. விவாதத்தின்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கூறியுள்ள புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
அது குறித்து கார்கே பேசும்போது, “பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்து 2014ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் கோடியாக இருந்தது. இது 2019ம் ஆண்டு ரூ.1 லட்சம் கோடியானது. அதற்கடுத்த 2.5 ஆண்டில் 13 மடங்கு உயர்ந்துள்ளது. என்ன மாயாஜாலம் நடந்தது என எனக்குத் தெரியவில்லை. அதானி விவகாரத்தில் மவுன ஆசாமி போல் இருப்பது ஏன்என பிரதமரை கேட்க விரும்புகிறேன். பொதுவாக மற்றவர்களை அச்சுறுத்தும் நீங்கள், தொழிலதிபர்களை அச்சுறுத்த தயங்குவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாஜக எம.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “பங்குச் சந்தை உயர்வால் அதானி சொத்து மதிப்பு உயர்ந்தது. இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை” என்றார்.
கார்கேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசும்போது, “இவ்வாறு பேசுவது உங்கள் பதவிக்கு அழகல்ல. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் சில பதவிகளை வகிப்பவர்கள் மீது அனைவருக்கும் மிகப்பெரிய மரியாதை உள்ளது” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து தொழிலதிபர் அதானியுடன் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய 8 கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், இதே விவாகாரம் குறித்து ராகுல் காந்தி தெரித்த 18 கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அவைக் குறிப்பில் நீக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறுகையில், தன்னுடைய கருத்துகள் நாடாளுமன்றக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அது தொடர்பான டுவிட்டர் பதிவில், “பிரதமரே, ஜனநாயகத்தின் குரலை உங்களால் ஒருபோதும் மறைக்க முடியாது. மக்கள் உங்களிடம் நேரடியாக கேள்வி கேட்கிறார்கள். நீங்கள் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் “பிரதமர் மோடி குறித்த எனது உரையின் சில பகுதிகள் ஏன் நாடாளுமன்ற குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன?” என்று மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரிடம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “என்னுடைய பேச்சில் யார் மீதான குற்றச்சாட்டுகளோ, தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளோ இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. உங்களுக்கு சந்தேகம் இருந்திருந்தால், அதை வேறு வகையில் என்னிடம் கேட்டிருக்கலாம். ஆனால், ஆறு இடங்களில் என்னுடைய வார்த்தைகளை நீக்கச் சொல்லி கேட்கிறீர்கள்.
மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு எதிராக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவை இன்னும் அவைக்குறிப்பில் இருக்கின்றன’’ என்றார்.
அதைத் தொடர்ந்து அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “அனைத்து விதிகளையும் பரிசீலித்தப் பின்னர் வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தெந்த வார்த்தைகள் அவைக்குறிப்புகளுக்கு எதிரானது என்று நாங்கள் படித்தும் பார்த்தோம். நான் அவர்களுக்கு மூன்று பக்க விளக்கம் கொடுத்துள்ளேன். அதற்கு பின்னராவது அவர்கள் திருப்தி அடைவார்களா என்று பார்க்கலாம்” என்றார்.