பாஜக வேட்பாளரை நிறுத்த சொல்லவில்லை. வாபஸ் பெறவும் சொல்லவில்லை. அண்ணாமலை அப்படி ஒரு அறிவுறுத்தல் விடுக்கவே இல்லை. அண்ணாமலை பேச்சை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.
சமூக வலைத்தளங்களில் தான் இறந்து விட்டதாக அவதூறு பரப்பப்படுவதாகவும் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறி டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறியதாவது:-
சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் அவதூறு பரப்பபடுகிறது. புகழேந்தி இறந்து விட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுகிறார்கள். இதை யார் செய்தது என்று ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. எனவே டிஜிபியிடம் புகார் அளித்து இருக்கிறேன். யார் செய்தது என்பதை வெளியில் சொன்னால் நன்றாக இருக்காது. எந்த பேஸ்புக்கில் இருந்து இந்த பதிவு வந்தது என்பதை எடுத்து விட்டோம். பழனிசாமி இது மாதிரியான வேலை எல்லாம் தூண்டிவிட்டு இறங்கிவிட்டாரே என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. ஒருபக்கம் ஓபிஎசை கடுமையாக திட்டி பதிவிடுகிறார்கள். எனவே டிஜிபியை சந்தித்து புகார் அளித்து இருக்கிறேன். ஆதாரங்களுடன் கொடுத்து இருக்கிறேன். 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
நான் காணாமல் போய்விட்டதாகவும், ஓடிவிட்டதாகவும் பேஸ்புக்கில் பதிவிடுகிறார்கள். இப்போ என்ன நடந்து விட்டது என்று எனக்கு புரியவில்லை. நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. ஊடகங்களும் மற்றவர்களும் சேர்ந்து பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கிறோம் என்று நினைக்கிறீர்கள். நான் தெளிவாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக சொல்கிறேன். பாஜக மீது மரியாதைதான் உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருக்கிறார். பிரதமர் மோடியுடன் கவுரமாக இருக்கிறார். பாஜகவுடன் நல்லுறவுடன் இருக்கிறாரே தவிர.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில வந்த நாங்கள் எவருக்கும் அடிமையில்லை. இதை நான் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதை சித்தரித்து பாஜகவுக்கு அடிமை என்பது போல கொண்டு போய் நிறுத்துகிறார்கள். இதை பார்ப்பதற்கே வேதனையாக உள்ளது. எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 90 சதவீதம் இரட்டை இலையை வைத்து எடப்பாடி பழனிசாமி தோற்றுள்ளார். சாமர்த்தியம் இருந்தால் ஈரோட்டில் வெற்றி பெற்று காட்டுங்கள். தேவையில்லாமல் பேச வேண்டாம். தொடர்ந்து எனக்கு எதிராக அவதூறு பரப்பப் பட்டால் நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். யார் சொல்லியும் கேட்க மாட்டேன்
ஈரோடு தொகுதிக்குள் வந்தால் 13 பேரை சுட்டுக்கொன்றதற்கான ஆதாரத்துடன் வருவேன். 46 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பான ஆதாரங்களை கொண்டு வருவேன். ஜெயலலிதா பெயரை சொல்லி என்ன ஊழல் எல்லாம் செய்தீர்கள் என்பதற்கான அத்தனை ஆதாரமும் வைத்துள்ளோம். தேர்தலில் முடிந்தால் டெபாசிட்டை காப்பாற்றுங்கள். தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளாத இடைக்கால பொதுச்செயலாளர் என்ற வார்த்தையை அண்ணாமலை பயன்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை இப்படி கூறியது சட்டப்படி குற்றம் இல்லையா.
சோதனையான கால கட்டமாக இதை நினைக்க வேண்டும். தொண்டர்கள் யாரும் சோர்ந்து போய்விடக்கூடாது. வேண்டும் என்றே எடுத்த முடிவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்காக எடுத்த முடிவு. பாஜக எந்த காலத்திலும் எங்களை இயக்க முடியாது. பாஜக வேட்பாளரை நிறுத்த சொல்லவில்லை. வாபஸ் பெறவும் சொல்லவில்லை. அண்ணாமலை அப்படி ஒரு அறிவுறுத்தல் விடுக்கவே இல்லை. அண்ணாமலை பேச்சை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.