தமிழகத்தில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை சட்டமாக்க வேண்டும் என ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறினார்.
தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழை தேடி என்கிற தலைப்பில், 8 நாட்கள் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை உலகத் தாய்மொழி தினமான வருகிற 21-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளார். இந்த பரப்புரை பயணம் வருகிற 28-ந் தேதி மதுரையில் நிறைவடைகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் தமிழறிஞர்களின் சிறப்புரைகள், இசைபாடல்கள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் தமிழ் குறித்து ஒரு பாடம் கூட இல்லாததால், மாணவ, மாணவிகள் தமிழில் எழுதப் படிக்க தெரியாமல் பட்டம் பெறுகிற நிலை உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என அனைத்திலும் தமிழ் வேண்டும் என்பதே இந்த பரப்புரையின் நோக்கமாகும். இங்கு தமிழில் பெயர்ப்பலகை எழுத வேண்டும் என அரசாணை இருந்தும் தற்போது நடைமுறையில் இல்லை.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பல மொழிகளை கற்றுக்கொள்வது தவறில்லை. ஆனால் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும். இதேபோல் இங்கு வேலை வாய்ப்பில் 80 சதவீதத்தினை, தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். தற்போது காவிரி டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதலில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் 93 சதவீதம் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களே இல்லை. இதனால் வேலை இல்லா திண்டாட்டம் பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.