இந்தியா முழுவதும் விடியல் ஏற்படுத்துவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2021-ல் தமிழ்நாட்டில் ஒரு விடியலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்களோ அதே போல் 2024 இந்தியாவுக்கே விடியலை ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு நிலை வரப்போகுது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை எழும்பூர் தொகுதியில் 6 முறை வெற்றி பெற்று பணியாற்றியவர் பரிதி இளம் வழுதி. தனி ஆளாக ஆளுங்கட்சிக்கு எதிராக போராடியவர் பரிதி இளம் வழுதி. மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் இல்ல திருமண விழா கொரட்டூரில் இன்று காலை நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பரிதி இளம் சுருதி-கனிஷ்கா திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

பரிதி இளம் வழுதி என் மீது அதிக அன்பு கொண்டவர். நட்புடன் இருந்தவர். தி.மு.க. துணை பொதுச் செயலாளராக பரிதி இளம் வழுதியை நியமித்து கலைஞர் அழகுப் பார்த்தார். இங்கு திருமணத்துக்கு வந்திருக்க கூடிய கழக பொறுப்பாளர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றி கொண்டிருக்கும் ஒருவர் விடுமுறை கேட்டு அனுமதி பெற்று இங்கு வந்திருக்கிறார்கள். எனவே திருமணம் முடிந்த கையோடு அவர்கள் அனைவரும் உடனடியாக ஈரோடு தேர்தல் பணிக்கு புறப்பட இருக்கிறார்கள். அவர்கள் புறப்படுகிறார்களா? என்று கண்காணிக்கும் நிலையில் நான் இருக்கிறேன்.

சென்னை எழும்பூர் தொகுதியில் 6 முறை வெற்றி பெற்று பணியாற்றியவர் பரிதி இளம் வழுதி. 1991 சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது தனி ஆளாக ஆளுங்கட்சிக்கு எதிராக போராடியவர் பரிதி இளம் வழுதி. 1980-ல் மதுரை ஜான்சி பூங்காவில் தலைவர் கலைஞர் தி.மு.க.வுக்கு என்று ஒரு துணை அமைப்பு தேவை. அதில் இளைஞர்கள் பங்கேற்றாக வேண்டும். இளைஞர்களை கவரும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து இளைஞரணி என்ற அமைப்பை உருவாக்கினார். அதற்கு பிறகு திருச்சியில் ஒரு கலந்துரையாடல் கூட்டம். அந்த கூட்டத்திலே கட்சியின் முன்னோடிகள் உரையாற்றினார்கள். அதில் பரிதி இளம் வழுதியும் உரையாற்றினார். அப்போது கலைஞரை கவரக்கூடிய வகையில் அவர் பேசினார். அந்த கூட்டத்தில் பரிதி குறிப்பிட்டு ஒன்றை சொன்னார். அது என்னவென்றால், இளைஞரணி தொடங்கி விட்டீர்கள். அந்த இளைஞரணிக்கு தலைவராக நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலினைத் தான் நியமிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பேசினார். அதற்கு பல உதாரணங்களை எடுத்துச் சொன்னார்.

அதற்கு பிறகு திருச்சியில் இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலைஞர் பேசுகிறபோது இளைஞரணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க கோரிக்கை வைத்தனர். நான் அதிலே உடன்படவில்லை. காரணம் வாரிசு வாரிசு என்று ஒரு அவப்பெயர் வந்து விடும். அப்படி ஒரு அரசியலை உருவாக்கி கேலி செய்து பேசுவார்கள். மகனை உருவாக்கி விட்டான் கருணாநிதி என்று எனக்கு பெயர் வந்து விடக்கூடாது. அதனால் நான் இதற்கு உடன்படவில்லை. இருந்தாலும் இளைஞரணிக்கு என்று உடனடியாக ஒரு குழுவை நியமிக்கிறேன் என்று சொல்லி ஒரு அமைப்பு குழுவை ஏற்படுத்தினார். பரிதி நான் உள்பட 7 பேர் இருந்தோம். அதன்பிறகு நாங்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று வந்தோம். இளைஞரணிக்கு நிர்வாகிகளை நியமித்தோம். அதன்பிறகு அந்த குழு கலைக்கப்பட்டு அமைப்பாளர் என்ற பொறுப்புக்கு என்னை நியமித்தார்கள். அதன்பிறகு இளைஞரணியின் செயலாளராக என்னை நியமித்தார்கள். அதற்கு பிறகு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இளைஞரணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்ட போது சென்னைக்கு பரிதி இளம் வழுதியை மாவட்ட அமைப்பாளராக நியமித்தேன். அதன்பிறகு பல்வேறு வளர்ச்சிகள் பெற்றார். கட்சியின் பல்வேறு பொறுப்பு வகித்தார். அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கலைஞர் நியமித்தார். அதன்பிறகு எம்.எல்.ஏ.வாகி படிப்படியாக உயர்ந்தார்.

இடையில் அவருக்கு கொஞ்சம் கோபம் வந்திருச்சு. அது ஏன் வந்தது? எதற்கு வந்தது? என்பதை இங்கு சொல்ல விரும்பவில்லை. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நம்மைவிட்டு மறைந்த போது முதல் ஆளாக நான்தான் போய் நின்றேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை பார்க்கிறேன். இன்று தேதி பிப்ரவரி 10. இதே 1969-ல் தான் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள். அந்த தேதியில் இந்த திருமணம் நடக்கிறது. இந்த விழாவில் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியும். ஈரோட்டில் தேர்தல். பல பேர் அந்த பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

எம்.பி.க்கள் ஏன் வரவில்லை என கேட்கலாம். டெல்லியில் பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும். பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையிலே ஒரு நாடகத்தை நடத்தி கொண்டிருக்க கூடிய நிலையில், நமது எம்.பி. டி.ஆர். பாலு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்களா? சேது சமுத்திர திட்டம் பற்றி விளக்கமாக பேசி அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறார். பதில் இல்லை. வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்போம் என்று சொல்லி தான் பிரதமராக இருக்க கூடிய மோடி ஆட்சிக்கு வந்தார். என்ன ஆச்சு? டி.ஆர். பாலு கேள்வி கேட்கிறார். பதில் இல்லை. வெளிநாட்டில் இருக்க கூடிய கருப்பு பணத்தை எல்லாம் கைப்பற்றி கொண்டு வந்து இந்தியாவில் இருக்க கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் உங்களது வங்கி கணக்கில் போடுவேன் என்று பிரதமர் சொன்னாரே? நிறைவேற்றப்பட்டு உள்ளதா? ரூ.15 லட்சம் வேண்டாம். 15 ரூபாயாவது போட்டிருக்கிறாரா? இல்லையே.

கனிமொழி எம்.பி. எய்ம்ஸ் என்னாச்சு என்று கேட்கிறாரே? 2021 பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். அதன் பிறகு பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டினாரே? இது வரைக்கும் எய்ம்ஸ் என்னாச்சு என்று தெரிய வில்லை. ஒரு செங்கலை வைத்து கொண்டு தம்பி உதயநிதி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து பிரசாரம் செய்தாரே? அந்த செய்தியை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்களே? அதற்கு பிறகாவது ஒரு வெட்கம் வந்திருக்க வேண்டாமா? மறுபடியும் பாராளுமன்ற தேர்தல் வருமே? தம்பி இன்னொரு செங்கலை எடுத்து கொண்டு கிளம்பிருவானே? என்ற பயம் வர வேண்டாமா? உங்களுக்கு? இந்த நிலையிலே கேள்விகள் கேட்கப்படும் போது பதில் இல்லை. அதே போல் ஆ.ராசா கேள்விக்களை தொடுக்கிறார். பதில் இல்லை. தம்பி தயாநிதி வேதனையோடு வந்து வெளியில் சொல்கிறார். பாராளுமன்றத்தில் கோரமே இல்லை. பிரதமர் மோடி பேசுகிற போது அத்தனை பேரும் வெளியே போய் விட்டார்கள். கோரமே இல்லை. வெட்கமா இருக்கு.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பியது பற்றி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினாரே? அதற்கும் ஏதேதோ விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் திருச்சி சிவா உப்புமாவை உதாரணம் காட்டி பேசினார். ஆக இப்படிப்பட்ட நிலையில் தான் இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்க கூடிய இந்த ஆட்சிக்கு எப்படி 2021-ல் தமிழ்நாட்டில் ஒரு விடியலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்களோ அதே போல் 2024 இந்தியாவுக்கே விடியலை ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு நிலை வரப்போகுது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள். தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு, தலையெழுத்தை மாற்றியது கலைஞர் பேனா. கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனாதான் கலைஞர் பேனா. டைடல் பார்க் அமைக்க கையெழுத்து போட்டது தான் கலைஞர் பேனா. குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளை வித்திட்டது கலைஞர் பேனா. பூம்புகாரை உருவாக்க திட்டமிட்டு அதற்கு கையெழுத்திட்டது கலைஞரின் பேனா. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்க காரணமாக இருந்ததும் கலைஞரின் பேனா தான். இவ்வாறு அவர் பேசினார்.