அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பங்குச்சந்தை ஒழுங்குமுறை விதிமுறைகளை மாற்றுவது குறித்து நிபுணர் குழு அமைக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்தாலும், ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கம் இந்திய பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. அதானி குழும பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதன் காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டார் அதானி. மேலும் அதானி குழுமத்தின் பங்குகளில் ரூ.74,000 கோடி மதிப்புள்ள பங்குகளை எல்ஐசி வைத்துள்ளதாகவும் அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளதாகவும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பதால் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ வங்கி ஆகியவற்றிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மனோஜ் திவாரி, எம்.எல்.சர்மா ஆகியோர் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஹிண்டன்பர்க் அறிக்கை நாட்டிற்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை ஒரு சதித்திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எம்.எல்.சர்மா ஆஜராகி, குறுகிய காலத்திற்குள் அதானி குழும பங்குகள் ரூ.2200-ல் இருந்து ரூ.600-க்கு குறைந்துள்ளது. இப்படியான வீழ்ச்சியை செபி அமைப்பு தடுத்திருக்க வேண்டும். ஆனால் செபி அமைப்பு அவ்வாறு தடை செய்யவில்லை. எனவே இதில் உள்நோக்கம் உள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, சந்திரசூட் தலைமையிலான அமர்வு, திடீரென பங்குச்சந்தை வீழ்ந்த காரணத்தால் சிறு முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில், செபி அமைப்பு அதானி விவகாரத்தை மிக கவனமாக கண்காணித்து வருகிறது என்று பதில் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், செபி செயல்பாட்டில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. தற்போது திடீரென பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்களைப் பாதுகாக்க ஒழுங்குமுறை ஆணையத்தின் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து நிதி அமைச்சகத்தையும் ஆலோசித்து திங்கட்கிழமை பதில் அளிக்க வேண்டும் என செபி அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், முதலீட்டார்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் முதலீட்டாளர்களின் நலனுக்காகவும், பங்குச் சந்தையின் நிலையான வளர்ச்சிக்காகவும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறைச் சட்ட விதிகளில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கவும் யோசனை தெரிவித்து வழக்கி திங்கட்கிழமைக்கு ஒத்துவைத்துள்ளது.