எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
ஈரோட்டில் அ.ம.மு.க. நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் அ.ம.மு.க.விற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவில்லை. அதனால் தான் நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகி விட்டோம். இந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நாங்கள் கருத்து கூறவில்லை. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். இந்த தேர்தலில் அ.ம.மு.க.வின் ஆதரவு யாருக்கும் கிடையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் இணைவோம். அப்போது ஜெயலலிதாவின் கட்சியை மீட்டெடுப்போம்.
இரட்டை இலை சின்னம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் இருந்தபோது செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது. தற்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும்போது அதன் செல்வாக்கினை இழந்து வருகிறது. வருங்காலத்தில் அந்த சின்னத்தை செல்வாக்கு உள்ள சின்னமாக மாற்ற காலம் வரும். இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்போம். நாங்கள் எடப்பாடி பழனிசாமி உடன் என்றைக்கும் இணையமாட்டோம். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுடன் தான் இணைவோம். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.