கோவை கொலை சம்பவத்துக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கே காரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த இரு இளைஞர்கள் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கோர கொலை சம்பவம் கோவையை உலுக்கியுள்ள நிலையில் வீடியோ காட்சியை வைத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருக்குன்றனர்.
இந்நிலையில், கோவையில் சில நாட்களாக அரங்கேறும் கொலை சம்பவங்களுக்கு சட்ட ஒழுங்கு சரியில்லாததே காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. உடனடியாக, தமிழக அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.