என்எல்சி விரிவாக்கத்திற்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் தரவேண்டும்: திருமாவளவன்

என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

பாராளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசியதாவது:-

என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணியில் ஈடுபட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் இதனால் இடம் பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எனது தொகுதியில் காட்டு மன்னார்குடி வரையில் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய இழப்பீடு தருவதற்கு தயாராக இல்லை. என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதுமட்டுமில்லாமல் சிஎஸ்ஆர் என்கிற பொதுநிதி அந்த பகுதியைச் சார்ந்த கிராமங்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் என்எல்சி நிர்வாகத்தினுடைய சிஎஸ்ஆர் நிதி என்பது வடஇந்திய மாநிலங்களில் குறிப்பாக பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பயன்படுத்தபடுவது நிறுத்தப்படவேண்டும். தமிழகத்தை சாராதவர்கள் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலையும் இருக்கிறது. இந்த அவலத்தை போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிஎஸ்ஆர் நிதியை அந்த பகுதியை மேம்படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.