நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது. எந்த இடத்திலும் சிப்காட் தொழிற்சாலை தொடங்க முடியாது என்று சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதத்தை வைத்து மனிதத்தை வைத்து அளவிடுகிற போக்கு இந்தியாவில் தான் உள்ளது. உலகத்தில் எங்கும் அப்படி இல்லை. மொழி வழியில் தான் தேசிய இனங்கள், நிலங்கள் உலகம் முழுவதும் இருக்கிறது. இங்கு மட்டும் தான் மதத்தை வைத்து சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று கூறுகின்றனர். பாரதிய ஜனதாவுக்கு இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதை தவிர வேறு கோட்பாடுகள் எதுவும் கிடையாது. பக்கத்தில் இருக்கும் மனிதனை பகையாக கருதிவிட்டு பசுவை ஆரத்தழுவு என ஒரு கோட்பாடு. அதை ஒரு நிகழ்ச்சியாக வேற வைக்கணும் என்கிறார்கள். இந்த கொடுமை எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது. எந்த இடத்திலும் சிப்காட் தொழிற்சாலை தொடங்க முடியாது. அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கலாம். கட்டுங்கள் பார்க்கலாம்.
இருக்கிற விமான நிலையத்தில் பறப்பதற்கு விமானம் உள்ளதா? விமான நிலையத்தை எங்கு வேண்டும் என்றாலும் உருவாக்க முடியும். விளைநிலத்தை உருவாக்க முடியுமா? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நீங்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு உள்ளது. சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால் என்னிடம் கேட்க மாட்டீர்களே. வட மாநிலத்தவர்கள் ரயில்களில் எப்படி தொடர்ந்து வருகிறார்களோ, அதே மாதிரி நான் வந்தால் இரண்டு மாதத்தில் திரும்பி போய்விடுவார்கள்.
மக்களுக்கு இடையே ஒரு உளவியல் நோயை உருவாக்கியது இந்த திராவிட கட்சிகள்தான். உழைப்பின் தேவை உள்ளது. அதனால் தான் வட இந்தியர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு வருகிறார்கள். வட இந்தியர்களை உழைப்பதற்கு ஈடுபடுத்தி பழகிவிட்டால் பிறகு அவர்களை தவிர்க்க முடியாது. 500 ரூபாய்க்கு வேலை செய்தவன் பிறகு ரூ.5 ஆயிரம் கேட்பான். எனக்கு வாக்கு செலுத்தி என்னை ஆட்சியில் அமர வையுங்கள். நான் நாட்டை பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வீட்டில் நிம்மதியாக உறங்குங்கள்.
குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு வட இந்தியர்கள்தான் காரணம். காவல்துறை உயர் அதிகாரிகள் முதல்வரிடம் சமர்பித்த அறிக்கையில் இதுதான் இருக்கிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது, நகை பறிப்பு போன்றவற்றில் ஈடுபடுவது வட இந்தியர்கள்தான். திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கான அரசு இல்லை. மொழி, நிலம், மக்களின் நலன் என எதிர்காலத்திற்கான அரசு இல்லை. ஒரு குடும்பம் வாழ்வதற்கும் ஆட்சி செய்வதற்காகவும் நாம் எல்லோரும் கூடி உழைக்கிறோம். இதற்கு வெட்கப்பட வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.