இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அது தவறு. ஏற்றுக்கொள்ளவும் முடியாது என சென்னையில் நடந்த திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.
அண்ணா நினைவு தினமான கடந்த 3-ந்தேதி ஈரோட்டில் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகள், சமூக நீதி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கினார். அவரது பிரசார பயணம் சென்னையில் நேற்று நடந்தது. இதையொட்டி மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் பொதுக்கூட்டம் நடந்தது. திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:-
திராவிட இயக்கத்தால் தமிழகத்தில் ஏராளமானோருக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைத்தது. அப்படிப்பட்ட அமைதி மற்றும் அறிவு புரட்சியை திராவிட இயக்கம் செய்தது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முக்கியம். ஆனால் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு தந்தது. ஆனால் எதையுமே செய்யவில்லை. கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல, சேது சமுத்திர திட்டம் என்ற மிகப்பெரிய திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் முடிவுற்று இருந்தால் தமிழக இளைஞர்கள் உள்பட ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, தென்கிழக்கு ஆசியாவிலேயே பொருளாதாரம் செழிக்கும் திட்டமாக உருவாகி இருக்கும். ராமர் பாலம் என்ற காரணத்தை சொல்லி இத்திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். இப்போது அது இல்லை என்று அவர்களே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கையில் எடுக்கவேண்டும். அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
உண்மைகள் எவ்வளவு கசப்பாக இருந்தாலும், அதனை மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறோம். இது சமூகநீதி பயணமாகும். நாம் தான் இந்தியாவுக்கே சமூகநீதியை சொல்லிக்கொடுத்து வருகிறோம். அது, தமிழ்நாடு என்ற பெரியார் மண் தான். இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அது தவறு. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.