ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி பாஜக தலைவர்கள், பிற கட்சித் தலைவர்கள் பலருக்கும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை எனது இல்லத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டேன். அவரது கடுமையான உழைப்பிற்கும், நேர்மையான சமுதாயப் பணிக்கும் கிடைத்த அங்கீகாரம்’ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.