பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம்: கோவை ராமகிருஷ்ணன்

பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம் என கோவை ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனிநாடு கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்தது. 2009-ல் ஆயுதங்கள் மவுனிக்கப்படுவதாக அறிவித்த விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 14 ஆண்டுகளாக எந்த அரசியல் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அதேநேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார் என்கிற நம்பிக்கையை பல புலிகள் ஆதரவு தலைவர்கள் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில்தான் தஞ்சாவூரில், முதல் முறையாக பிரபாகரன் குடும்பத்தினர் அனுமதியுடன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற செய்தியை அறிவிக்கிறேன் என்றார் பழ.நெடுமாறன். பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பானது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல இலங்கை மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அப்பால் பிரபாகரனின் குடும்பத்தினர் அனுமதியுடன் அறிவிக்கிறேன் என நெடுமாறன் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இலங்கை அரசியல் தலைவர்கள் அனைவரும் பிரபாகரன் உயிருடனே இல்லை என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இதேபோன்ற கருத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கூறி வருகிறார்.

இந்நிலையில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமான தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் ஒருவரான, தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், பிரபாகரன் மகள் துவாராக மூலமாக ஆயுதப் போராட்டமாக இல்லாமல் அரசியல் போராட்டத்தை தொடங்க வைக்க ஒரு முயற்சியாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற தகவல் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். அத்தகைய போராட்டத்துக்கு மத்திய பாஜக அரசு ஆதரவு தருவதாக உறுதியளித்திருக்கலாம் என நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து. யாரும் இப்படி எதுவும் சொல்லவில்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன், பிரபாகரன் மகன்கள் சார்லஸ் ஆண்டனி, பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மூவரது உடல்களும் கூட இலங்கை ராணுவத்தால் காட்டப்பட்டன. ஆனால் பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் கொல்லப்பட்டதாக மட்டும் இலங்கை ராணுவம் தெரிவித்தது. அவர்களது உடல்கள் இதுதான் என இலங்கை ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையும் பிரபாகரன் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.