2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை: அமித் ஷா!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித் ஷா, பிரபல, ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அதானி விவகாரம், காலிஸ்தான் விவகாரம், 2024 மக்களவைத் தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சிறப்பு பேட்டி அளித்து உள்ளார். பேட்டியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-

அதானி குழும விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் வசம் வழக்கு விசாரணை இருப்பதால் அமைச்சராக இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்வது சரியல்ல. ஆனால், இதில் பாஜக பயப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை. பிரதமரை ஒட்டுமொத்த நாடும் கவனித்து கொண்டிருக்கிறது. சமூக ஊடக தளங்களை சென்று பாருங்கள். பிரதமர் மோடி உரைக்கு வரும் விமர்சனங்களை படித்து பாருங்கள். சில கட்சிகள் பிரதமர் உரையை கவனிக்க விரும்பாமல், அரசியல் நிலைப்பாட்டை எடுத்து உள்ளனர். பொதுமக்கள் இதனை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

நான் பிஎப்ஐ.யும் காங்கிரசும் ஒன்று தான் என்று கூறவில்லை. பிஎப்ஐ மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பிஎப்ஐ உறுப்பினர்கள் மீதான வழக்குகளை காங்கிரஸ் திரும்பப் பெற்றது. நாங்கள் அதை தடுக்க முயற்சித்தோம். இதில் கவலைப்பட என்ன உள்ளது? நாங்கள் வெற்றிகரமாக பிஎப்ஐ அமைப்பை தடை செய்து விட்டோம். பிஎப்ஐ மதமாற்றம், பயங்கரவாதத்தை பரப்புகிறது என நான் நம்புகிறேன். பயங்கரவாத செயலுக்கான மூலப்பொருட்களை தயாரிக்க பிஎப்ஐ முயற்சிக்கிறது. நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான பல்வேறு செயல்களில் பிஎப்ஐ மேற்கொண்டு வருவதற்கான பல்வேறு ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. பிஎப்ஐ தடை அரசியலுக்கு அப்பாற்பட்டது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு போட்டி இல்லை என்று நம்புகிறேன். பிரதமர் மோடியுடன் சேர்ந்து நாடு முழு மனதுடன் முன்னேறி வருகிறது. மக்கள் தற்போது குடும்ப கட்சிகளின் ஆட்சியில் இருந்து மாறி பாஜகவின் வளர்ச்சி அரசியலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கர்நாடகாவில் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 மாதங்களில், நான் 5 முறை கர்நாடகாவிற்கு சென்றுள்ளேன். அந்த மாநில மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே கர்நாடகாவில் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.