கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர். கடந்த மாதம் தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் சிவசங்கர். எனினும் லைஃப் மிஷன் என்ற ஊழல் வழக்கில் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வந்தவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவியுடன் வடக்கஞ்சேரியில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் ஒப்பந்தம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவசங்கர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் பெற ரூ.4 கோடியே 48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக காண்ட்ராக்டர் சந்தோஷ் ஈப்பன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதேபோல, கேரள தங்க கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியான ஸ்வப்னா சுரேஷுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கு பிறகுதான், ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.1 கோடி கமிஷனாக பெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் இதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தொடர்ந்து சொல்லி வந்தார் சிவசங்கர். அத்துடன், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் கூறினார். இதன்காரணமாகவே, அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் இருந்து வந்தார். எனினும், சிவசங்கருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்து கொண்டே இருந்தது. கடந்த 3 நாட்களாகவும் விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. நேற்றிரவு 11.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.. இன்றைய தினம் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு அடிப்படை காரணமாக இருந்தது ஸ்வப்னா தந்த வாக்குமூலம்தான். முதன்முதலில், சிவசங்கரின் ஆடிட்டர், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் சேர்ந்து வங்கியில் எடுத்திருந்த லாக்கரிலிருந்து ஒரு கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான், அது சிவசங்கர் ஊழல் மூலம் சம்பாதித்த பணம் என்று ஸ்வப்னா வாக்குமூலத்தில் தெரிவித்தார். அதாவது, லைஃப் மிஷன் ஊழல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், பிஎஸ்சரித், சந்தீப் நாயர், இந்த திட்டத்தின் ஒப்பந்ததாரர் சந்தோஷ் ஈப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. லைஃப் மிஷன் திட்டத்தில் 6 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார். அதற்கு பிறகுதான், இந்த வழக்கில் சிவசங்கர் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டார். நேற்றிரவு கைதான சிவசங்கரை மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் அவரை இன்று எர்ணாகுளம் பிரின்ஸ்பல் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.