சேலத்தில் ஆய்வுக்கு களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின் விவசாயிகளுடனும் சந்திப்பு!

கள ஆய்வு மேற்கொள்வதற்காக சேலம் வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார். தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட ஆய்வு பணியை தொடங்கினார். தற்போது இரண்டாம் கட்டமாக வடக்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தி வருகிறார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் இன்று வந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, சேலம் புறப்பட்ட முதலமைச்சர் திடீரென ஓமலூர் – மேட்டூர் பிரதான சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் இறையன்புவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். வருகைப் பதிவேட்டினை பார்வையிட்ட முதலமைச்சர் அதிகாரிகள் பணியாற்றும் விதம் குறித்து கேட்டறிந்தார். மேலும், பட்டா மாறுதல் உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்கள் ஓமலூர் தாலுகாவில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளன, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஓமலூர் வட்டாட்சியர் வல்லமுனியப்பனிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து வருவாய் கிராமங்கள் வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக காத்திருந்த பொதுமக்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எப்போது மனு வழங்கப்பட்டது, உடனடியாக தீர்வு காணப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இதன் தொடர்ச்சியாக சேலம் சென்ற அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈரடுக்கு பேருந்து நிலையம், விக்டோரியா கலையரங்கம் ஆகிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறையினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.