அண்ணாமலை ஆதரவு வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்: முத்தரசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கேஎஸ் தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சிறப்பாக இருக்கிறது. அதிகார பலம், பண பலம் பயன்படுத்தப்படுவதாக அதிமுக குற்றம்சாட்டுகிறது. அவர்களின் தோல்வி உறுதியானதால், தோல்விக்கான காரணத்தை அதிமுகவினர் சொல்லி வருகிறார்கள். இந்தத் தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்து தேர்தல் பணிமனை பேனரை மாற்றுவதும், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது மட்டுமே அதிமுகவின் பணியாக இருக்கிறது. அதிமுக தோல்வியடைய போகிறது. அதற்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது இன்று வரையும் தொடர்கிறது. இப்படி தான் களம் இருக்கிறது. அதிமுக தொடர்ந்து குழப்பமான மனநிலையிலேயே இருக்கிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் பற்றிய இபிஎஸ் விமர்சனம் குறித்த கேள்விக்கு, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது எடப்பாடி பழனிசாமிக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தியாவில் எந்தக் கட்சி யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக கிழித்த கோட்டை தாண்டாத கட்சியாக அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாஜகவின் பிரச்சினைகளை குறித்து விமர்சிக்க முடியாத நெருக்கடியில் அதிமுக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. திமுகவுக்கோ, மற்ற கட்சிகளுக்கோ அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு செயல்பட வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால் அதிமுகவுக்கு அப்படியல்ல. பாஜகவுக்கு சேவகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆளாகிறார்கள். வேட்பாளர் கூட பாஜக முடிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மத்திய பட்ஜெட்டை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், அதிமுக எந்த கருத்தையும் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல் அதானி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து கூறவில்லை. இதன் மூலமாக யாருக்கு யார் அடிமையாக இருக்கிறார்கள் என்பது புரியும். தங்கள் மீதான பழியை துடைக்க, இடதுசாரிகளை வசைபாடுவதன் மூலம் தங்கள் அணியிடம் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். இடதுசாரிகளின் போராட்டம் வழக்கம் போல் நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் போராடி கொண்டே தான் இருக்கிறோம். அதனை அதிமுகவினர் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் சமரசமே கிடையாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பற்றிய அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, அண்ணாமலை இன்னும் ஈரோடு இடைத்தேர்தல் களத்திற்கு செல்லவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். அதுதான் களத்தின் எதார்த்த உண்மை என்று தெரிவித்தார்.