சிபி ராதாகிருஷ்ணன் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார்!

ஜார்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் வழங்கி உள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவராக இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இந்நிலையில் தான் 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதலில் இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சிபி ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்பட பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்க உள்ளார். ஆளுநராக பொறுப்பேற்க உள்ளவர் எந்த கட்சி பொறுப்புகளிலும் இருக்க கூடாது என்பது விதிமுறையாகும். இதனால் சிபி ராதாகிருஷ்ணன் இன்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்து கொள்வதாக கூறி அதற்கான கடிதத்தை சென்னை கமலாலயத்தில் வைத்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.

இதுபற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‛‛சிபி ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக கடிதம் வழங்கி உள்ளார். இந்த கடிதத்தை கனத்த இதயத்துடன் ஏற்கிறேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அரும்பாடு பட்ட தலைவர்களில் ஒருவராக சிபி ராதாகிருஷ்ணன் இருந்தார். மாநில தலைவராகவும், கோவை எம்பியாகவும் இருந்தவர். மேலும் நாடாளுமன்றத்தின் பல நிலைக்குழுக்களில் பொறுப்பு வகித்துள்ளார். கேரளா மாநில பொறுப்பாளராகவும் இருந்தார். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்து கட்சியை வளர்க்க அச்சாணியாக இருந்தார். 3 நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்தார். இதனால் கட்சியை பற்றி அவர் இனி பேச முடியாது. தமிழக பாஜக அவருக்கு எப்போதும் நன்றிகடன் பட்டு இருக்கம். விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இருந்து விலக ஒப்புதல் கொடுத்துள்ளோம்” என்றார்.

இதையடுத்து அண்ணாமலை உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாதாக சென்னை கமலாலயம் வந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவினர் மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் அவருக்கு தமிழக பாஜக சார்பில் இன்று பாராட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.