வரும் பிப்ரவரி 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை!

சென்னையில் பிப்ரவரி 20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய அணிகளின் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் பாஜக தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தங்கள் அணியின் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்டது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி அணியின் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இரட்டை இலையில் போட்டியிடுகிறார். அதேபோல் ஓபிஎஸ் தரப்பில், வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாகவும், இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், ஓபிஎஸ் அணி தரப்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் பிப்ரவரி 20ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 20-02-2023 திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.