உக்ரைனின் கார்கிவ் நகரில் ஆயுத கிடங்குகள் மீது குண்டுவீசிய ரஷ்ய ராணுவம், அங்கு வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தந்த ஆயுதங்களை அழித்துவிட்டதாக கூறி உள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 73வது நாளை எட்டி உள்ளது. கிழக்கு உக்ரைனை மொத்தமாக கைப்பற்றும் திட்டத்துடன் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை கார்கிவ், ஒடேசா துறைமுக நகரம் ஆகிய இடங்களில் உள்ள உக்ரைன் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. இதில் ஒடேசா துறைமுக நகரத்தின் துஷ்ஷேரா பகுதியில் இருந்த 3 ஆயுத கிடங்குகள் உட்பட 18 உக்ரைன் ராணுவ தளங்களை இரவோடு இரவாக ரஷ்யா அழித்துள்ளது. அதே போல, கார்கிவ் நகரின் பொகுடிகோவ் ரயில் நிலையம் அருகே இருந்த உக்ரைனின் ஆயுத கிடங்கையும் ரஷ்யா அழித்துள்ளது. இங்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வழங்கிய நவீன ஆயுதங்களை உக்ரைன் ராணுவம் வைத்திருந்ததாகவும், அவை மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா கூறி உள்ளது.
இதற்கிடையே, உக்ரைனுக்கு மேலும் ரூ.1,125 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ராணுவம் மற்றும் பிற உதவிகளின் மொத்த மதிப்பு ரூ.28,500 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை அனுப்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கும்படியும் அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் தொடர் ராணுவ உதவியால் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வராமலும், பேச்சுவார்த்தையின்றி தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 77வது ஆண்டு விழாவை ரஷ்யா நாளை கோலாகலமாக கொண்டாட உள்ளது. அன்றைய தினம் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான ஒத்திகைகள் நேற்று நடந்தன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அணிவகுப்பில் 2ம் உலகப் போரில் உயிர் நீத்த ரஷ்ய வீரர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்படுவது வழக்கம். இம்முறை உக்ரைன் போரில் உயிரிழந்த வீரர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரையும் கவுரவிக்க அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதோடு, மே 9ம் தேதிக்குள் கிழக்கு உக்ரைனை ரஷ்யா மொத்தமாக தன் வசப்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இதனால் நாளை இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை அதிபர் புடின் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக, உக்ரைனில் நேற்று ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷ்ய அதிபரைப் பற்றி அதிகம் அறிந்தவரான, அமெரிக்க உளவுத்துறை(சிஐஏ) இயக்குனராக இருக்கும் பில் பர்ன்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷ்யப் படைகள் கீவை கைப்பற்றத் தவறிய போதிலும், தென்கிழக்கு டான்பாஸ் பகுதியில் முன்னேற அவர்கள் போராடினாலும், உக்ரைனை தனது படைகளால் தோற்கடிக்க முடியும் என்ற தனது பார்வையை ரஷ்ய அதிபர் இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை. உக்ரைனில் வெற்றி பெறுவதற்காக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாஸ்கோ தயாராக இல்லை. ஆனால், இந்த சாத்தியக்கூறுகளை நாம் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. போர் எப்படி முடிவடையும் என்று என்னால் கணிக்க முடியாது. தற்போதைய போர்க்கள நிலைமையை என்னால் மதிப்பீடு செய்யவும் முடியாது.
உக்ரேனின் எதிர்ப்பை முறியடிக்கும் ரஷ்ய இராணுவத்தின் திறனில் புதினுக்கு நம்பிக்கை உள்ளது. முக்கிய போர்க்களத்தில் தோல்விகளை சந்தித்தாலும் ரஷ்ய இராணுவத்தின் திறமை மீதான புதினின் நம்பிக்கை இன்னும் அசைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.