பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை: திருமாவளவன்!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருக்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக அமைச்சர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன் ஆகியோருடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திருமாவளவன் பேசியதாவது:-

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி சான்றிதழாக அமையவேண்டும். அதிமுகவுக்கு போடும் ஓட்டு, பாஜகவுக்கு போடும் ஓட்டாகவே இருக்கும். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக மூலம் குதிரை ஏறி ஜெயிக்கப் பார்க்கிறது. மக்களவைத் தேர்தலில் மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஒரு அச்சாணியாக இருக்க வேண்டும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். அதோடு தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். முதல்வரின் அன்பைப் பெற்றவர். இந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்தால் அவர் கேட்கும் அனைத்து திட்டங்களையும் முதல்வர் செய்து தருவார். எனவே, ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

திமுக அரசு இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொண்ட அரசு என்ற நன்மதிப்பைக் கொண்டிருக்கிறது. அதற்கு மக்கள் அளிக்கின்ற நற்சான்றிதழாக இந்த வெற்றி அமையும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிரிகளை அச்சுறுத்துவது என்பது கொடுங்கோன்மையின் உச்சம். மோடி தலைமையிலான அரசு கொடுங்கோல் அரசு என்பதற்கு பிபிசி அலுவலக சோதனை ஒரு சான்று. 10 ஆண்டுகளில் மோடியின் நண்பர் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் வந்துள்ளார். நாம் 10 ஆண்டுகள் உழைத்தாலும் மாற்றுத்துணி கூட வாங்க முடியவில்லை. 2024 ஆம் ஆண்டு திமுகவைபோல ஒரு கூட்டணி அமைந்தால் மோடி அரசை நாடாளுமன்றத்தில் இருந்து தூக்கி எறியலாம்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று தற்போது கூறுவதற்கு காலப் பொருத்தமும் இல்லை அரசியல் பொருத்தமும் இல்லை. இந்திய பாஜக அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் வேறு நோக்கத்தோடு சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு தலையிடுவதாகத் தெரிகிறது. இந்திய அரசின் பின்னணியில் உள்ள இந்திய அரசு உளவுத்துறை இந்த அறிவிப்பின் பின்னணியில் இருந்து செயல்படுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.