கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது: வானதி சீனிவாசன்

கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது என்றும், ரவுடிகளுக்கு பயம் இல்லை என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இடைத்தேர்தலில் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் உட்கார்ந்துட்டு இருக்காங்க.. கோவையில் பட்டப்பகலில் எஸ்.பி அலுவலகம் முன்பாக.. கலெக்டர் அலுவலகம் முன்பாக படு கொலைகள் நடக்கிறது. தொடர்ச்சியாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கிறது. திமுக கவுன்சிலர் கிருஷ்ணகிரியில் ஒரு ராணுவ வீரரை பிரச்சினையில் அடித்து இருக்கிறார். இது ஒரு கொலை மாதிரிதான். தகராறில் வந்து இருக்கிறது. கொலையில் முடிந்து இருக்கிறது. திமுகவினரும் அவர்களுடைய ஆதரவை பெற்றவர்களும் அரசாங்கம் அவர்களிடம் இருக்கிறது என்ற காரணத்திற்காக வன்முறை மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அமைச்சரே பொது இடத்தில் கல்லெடுத்து அடிப்பது.. நிர்வாகிகள் சேலஞ்ச் விடுப்பது போன்ற விஷயங்கள் அதிகரிப்பது எதைக் காட்டுகிறது என்றால் அரசாங்கத்தில் இருப்பவர்கள் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்ன பண்ணினாலும் நடவடிக்கை எடுக்காது என்று நினைப்பதையே காட்டுகிறது.

இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறும் போது முதல்வர் தனது கட்சிக்கு சரியான கட்டுப்பாடுகளை விதித்து சட்டம் ஒழுங்கை பரமாரிப்பதற்காக நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வெண்டும். அரசு இயந்திரம் முழுமையாக முடங்கிப்ப்போய்விடும் அளவுக்கு ஒரு தொகுதியின் தேர்தல் பணி முடக்கிப்போய்விடக்கூடாது. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் கொடுக்கிறது. எங்கள் கட்சி (பாஜக) புகார் கொடுக்கிறது. பணப்பட்டுவாடா பற்றியும் மக்கள் அடைத்து வைக்கப்படுவது பற்றியும் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையமும் இதைப்பற்றி தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா பாணியில் கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.