மீன்பிடிக்க சென்ற தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-
சேலம் மாவட்டம் கொளத்தூர் போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட கோவிந்தபட்டியை சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட 7 பேர் கடந்த 14-ந்தேதி அன்று காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராஜாவை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் கண்டனம் மட்டும் தெரிவித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.