நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகரான மயில்சாமி மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். முன்னதாக மயில்சாமிக்கு இரண்டுமுறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் தினம் மகா சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். உடன் டிரம்ஸ் சிவமணியும் இருந்துள்ளார். இதையடுத்து அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய மயில்சாமி, பசிப்பதாக கூறி 4 மணியளவில் இட்லி சாப்பிட்டுள்ளார். இதையடுத்தே நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அவரை அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. திரையுலகினர் இதையடுத்து அவரது உடலுக்கு திரையுலகத்தினர் தொடர்ந்து நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி அவர் பலமுறை தன்னை வீட்டிற்கு அழைத்ததாகவும் தான் இப்போது வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதேபோல, கோவை சரளா, பார்த்திபன், மனோபாலா உள்ளிட்டவர்களும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் உங்களது இனிமையான வேடிக்கையான வழிகள் எப்போதும் நினைவில் இருக்கும் அன்பு மயில் என்று தெரிவித்துள்ளார்.
மயில்சாமியின் இயல்பான காமெடி தன்னுடைய இயல்பான காமெடியால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் மயில்சாமி. அவரது இழப்பு தமிழ் சினிமாவின் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அவர் வாழ்ந்த காலங்களில் தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மயில்சாமி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் பேசினார். மயில்சாமி அவர்கள் நல்ல நடிகர், நடிகர் மட்டுமில்லாமல் எதார்த்தமான மனிதர், அவர் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் நைட்டுக்கூட அவரிடம் பேசினேன் என தழுதழுத்த குரலில் அழுது பேச முடியாமல் கண்கலங்கினார்.
நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் பதிவில், நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy என பதிவிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி தனது இரங்கல் பதிவில் சிவராத்திரி இரவெல்லாம் இறைவனை வேண்டிய வேளையிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்.. புண்ணியாத்மா. அவர் மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.
காமெடி நடிகரான சாம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், அற்புதமான மிமிக்ரி திறமையால் அகில உலகமும் சுற்றி வந்தவர், அளவில்லாத நகைச்சுவையை சினிமாவில் அள்ளித்தந்தவர். அடுத்தவர்க்கு அன்னமிட்டு அழகு பார்ப்பவர், சிரிக்க வைக்கும் சித்தனே, சிவனுடைய பக்தனே, சிவனே சிரித்து மகிழத்தான் சீக்கிரமே கொண்டு சென்று விட்டானோ? பிரார்த்திக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால் அவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உங்களின் நகைச்சுவை உணர்வும் நேர்மறை மனப்பான்மையும் ஷூட்டிங் ஸ்பாட் முழுவதும் சிரிப்பாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்திருக்கும்.. RIP மயில்சாமி சார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.
சென்னை, வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சித்தார்த் மயில்சாமி உயிரிழந்த செய்தியை அறிந்ததும் நேரில் சென்று மாலை அணிவித்து மயில்சாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். எப்போதுமே பாசிட்டிவ் ஆக பேசக்கூடிய மனிதர், அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மறைவார் என நினைக்கவில்லை என நடிகர் சித்தார்த் அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
நடிகர், தயாரிப்பாளர், விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் மயில்சாமியின் மறைவை அறிந்து மிகவும் வேதனைப்பட்ட நிலையில், நேரில் சென்று அவரது திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மயில்சாமி எனக்கு ஒரு அண்ணன் மாதிரியே இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடனே பேசுவார். அவரது மறைவு செய்தி அறிந்ததுமே ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக பேரிழப்பு தான் என்று உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் போலீஸ் அதிகாரியாக மயில்சாமி நடித்திருப்பார். மொத்தம் 50 நாட்கள் அந்த படம் எடுக்கப்பட்டது. அதில், 40 நாட்கள் என்னுடனே அவர் டிராவல் செய்தார். அவருடைய நல்ல மனசை பலரும் பாராட்டி உள்ளனர் என நெஞ்சுக்கு நீதி படத்தில் மயில்சாமி உடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், எஸ்வி சேகர், மயில்சாமியின் மறைவுக்கு வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். மயில்சாமி காலையிலே எழுந்ததுமே இப்படி ஒரு துக்ககரமான செய்தியை கொடுத்துவிட்டு படார்னு போய்ட. நேத்தி ராத்திரிக்கூட கோவிலில் இருந்து பேசுன, நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்று பாட்டு போட்டு கிரபிரவேஷத்தை முடித்தேன் என்று சொன்ன. இவ்வளவு அவசரமாக இந்த உலகத்தை விட்டு போவதற்கு உனக்கு என்ன, 57 வயது தானே. நீ 80 வயசு 100 வயசு வரை இருந்து இருக்கலாம். ஆனால், இது எல்லாம் உன் கையிலோ, என் கையிலோ இல்லை. இருந்தாலும், சிவபக்தனான நீ, மூன்று கால பூஜையை பார்த்துவிட்டு இறந்து இருக்கிறாய், உனக்கு சொர்க்கம் நிச்சயம். ஆனால், வீட்டில் இருப்பவர்களை நீ நினைச்சி பார்த்தியா? அவர்களை ஏன் படார்னு விட்டுட்டு போய்ட. அன்புள்ள மயில்சாமி உன் ஆத்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பல கோடி ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் சிரிக்க வைத்து வந்த மயில்சாமி ஏகப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற பண உதவிகளையும் செய்துள்ளார். மயில்சாமியின் வீட்டுக்கு அருகே உள்ள பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் கண்ணீர் மல்க மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என தொடர்ந்து மயில்சாமியின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.