கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை அருகே உள்ள வெள்ளலூர் கருப்புராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி நாகலட்சுமி (50). இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் மதன்குமார் (25). இவர் பி.எஸ்சி. (ஐ.டி) படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நாளடைவில் மதன்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தியதால் மதன்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் கடந்த சில நாட்களாக கடுமையான தலை வலி மற்றும் கண்பார்வை மங்கி பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார்.
தலைவலி, கண்பார்வை மங்கியதால் மதன்குமார், மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நாகலட்சுமியும், பாலசுப்பிரமணியனும் வழக்கம் போல வேலைக்கு சென்றனர். இதனால் மதன்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் ஆன்லைன் விளையாட்டால், உடல்நிலை பாதிக்கப்பட்டதை நினைத்து வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததாலும், சரியான வேலை கிடைக்காததாலும், வாலிப வயதிலேயே கண்பார்வை மங்கியதாலும் வாழ்க்கையில் விரக்தியடைந்த மதன்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆயுதப்படை போலீஸ்காரர், வங்கி ஊழியர் மற்றும் தனியார் வங்கி ஊழியர் என 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் பட்டதாரி வாலிபர் மதன்குமார் 4-வதாக தற்கொலை செய்துகொண்டது கோவையில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டமசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு, பலர் தற்கொலை செய்து கொள்வதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கான தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.