2 ஆயிரம் கோடி கொடுத்து சிவசேனாவை வாங்கியிருக்காங்க: சஞ்சய் ராவத்

மககாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ரூ.2 ஆயிரம் கோடி கொடுத்து சிவசேனே கட்சியின் பெயரும் சின்னமும் வாங்கப்பட்டு இருப்பதாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடைந்தது. உத்தவ் தாக்கரேவிடம் இருந்து தனி அணியாக சென்ற ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இணைந்து பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். சிவசேனா கட்சியின் இரு அணிகளும் கட்சியின் சின்னம் மற்றும் பெயருக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறி அவரது அணியே உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதன்படி, ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி பெயரையும், அந்த கட்சியின் ‘வில்-அம்பு’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கியது. உத்தவ் தாக்கரே அணிக்கு, ‘உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா’ என்ற கட்சி பெயரையும், “தீப்பந்தம்” சின்னத்தையும் தேர்தல் ஆனையம் ஒதுக்கியுள்ளது. சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஒதுக்கியது பால் தாக்கரேவின் வாரிசான உத்தவ் தாக்கரேவிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உத்தவ் தாக்கரே தரப்பு திட்டமிட்டு வருகிறது.

உத்தவ் தாக்கரே அணியினர் இந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வில், அம்பை திருடியவர்களுக்கு தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை என மிகக் கடுமையான விமர்சனங்களை உத்தவ் தாக்கரேவே வைத்து இருந்தார். மேலும், வில், அம்பு திருடப்பட்டுள்ளது. வில், அம்பை திருடியவர்களுக்கு உரிய பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். தீப்பந்தத்தை(சின்னம்) வைத்து பதிலடி கொடுப்போம். உங்கள் அடிமையாக உள்ள அரசு இயந்திரத்தை பயன்படுத்தி சிவசேனாவை அழித்துவிட முடியாது என்பதை பாஜகவும் பிரதமர் மோடியும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு மகாராஷ்டிராவில் வார்த்தை யுத்தம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்.பியுமான சஞ்சய் ராவத், தனது டுவிட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒரு டீல் தான். சிவசேனா கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பெற ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பண பேரம் நடைபெற்றதாக எனக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தது. இது தொடர்பாக பல விஷயங்கள் விரைவில் வெளியிடப்படும். நமது நாட்டு வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதே கிடையாது” என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஒரு கட்டுமான தொழில் அதிபர் இந்த தகவலை தன்னிடம் பகிர்ந்ததாகவும் தன்னிடம் உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அதை வெளியிட இருப்பதாகவும் கூறினார். ஆனால், சஞ்சய் ராவத்தின் இந்த குற்றச்சாட்டை ஏக்நாத் ஷிண்டே முகாமை சேர்ந்த எம்.எல்.ஏ சதா சர்வங்கர் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சஞ்சய் ராவத் என்ன கேஷியரா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.